Showing posts with label Palm sunday. Show all posts
Showing posts with label Palm sunday. Show all posts

Saturday, March 28, 2026

குருத்தோலை மட்டும் ஏந்தாதீர்கள்; சிலுவையையும் ஏந்துங்கள் - குருத்து ஓலை ஞாயிறு

மத்தேயு 21:1-11. எசா 50:4-7. பிலி 2:6-11.

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் கொண்டாடும் குருத்து ஓலை ஞாயிறு (Palm Sunday) ஒரு நிகழ்வு மட்டும் அல்ல; அது புனித வார வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம். சென்ற ஆண்டும் இதே நாளில் குருத்தோலை ஏந்தி வந்தோம். பின்னர் அந்த ஓலைகள் சாம்பலாகி நெற்றியில் பூசப்பட்டு, 40 நாள் தவப்பயணத்தை மேற்கொண்டோம். இன்று மீண்டும் புதிய குருத்தோலைகளை ஏந்துகிறோம். இதுவே கிறிஸ்தவ வாழ்க்கை: மகிழ்ச்சியிலிருந்து சோதனை, சோதனையிலிருந்து தியாகம், தியாகத்திலிருந்து உயிர்ப்பு.

இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் பதிவு செய்கிறார்கள். எனினும், ஒத்தமைவு (சினாப்டிக்) நற்செய்திகளோடு ஒப்பிடும்போது, மத்தேயு நற்செய்தியாளர் சில ஆழமான உண்மைகளை வலியுறுத்துகிறார்:

  1. இயேசு ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் கொண்டு நுழைகிறார் (மற்ற நற்செய்திகளில் குட்டிக் கழுதை மட்டும் குறிப்பிடப்படுகிறது). இதன் பொருள்: “இயேசு ஒருவராக இல்லை”; தந்தை அவரோடு இருக்கிறார். மத்தேயுவைப் பொருத்தவரை, அவர் “இமானுவேல்” – கடவுள் நம்மோடு. இது இயேசுவுக்கான உண்மை மட்டும் அல்ல; துன்பத்தில் இருக்கும் மனிதனோடு, அநீதியில் வாடும் மக்களோடு, தனிமையில் அழும் உள்ளங்களோடு கடவுள் பயணிக்கிறார்.
  2. இறைவாக்கினர் “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்.” இதுவரை இஸ்ராயேல் மக்களிடம் வந்தவர்கள்—அசீரியர்களும் பாபிலோனியர்களும்—குதிரைகளில் வந்தார்கள். அவர்கள் இரத்தத்தையும், அழுகையையும், கண்ணீரையும் கொண்டு வந்தார்கள். ஆனால் இயேசு அமைதியை கொண்டு வருகிறார்.
  3. “இவர் யார்?” என்ற கேள்வியை மத்தேயு எழுப்புகிறார். “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று மக்கள் முழங்குகிறார்கள். மத்தேயு நற்செய்தியின் வாசகர் ஒவ்வொருவரும் “இவர் யார்?” என்ற கேள்வியைத் தமக்குள் எழுப்ப வேண்டும்.

ஆண்டவராகிய இயேசு நம் வாழ்க்கை என்னும் எருசலேமிற்குள் நுழைகிறார். இமானுவேலராக நம்மோடு நிற்கிறார். அமைதியை நமக்கு தருகிறார். இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் “இவர் யார்?” என்ற கேள்விக்கான பதிலை நம் இதயத்தின் அமைதியில் அளிக்க வேண்டும்.

நம் காலத்தின் சிலுவை – போர். அன்பானவர்களே, இன்று உலகம் முழுவதும் நாம் சந்திக்கும் ஒரு பெரிய உண்மை: போர்.

Strait of Hormuz ஏறக்குறைய மூடப்பட்ட நிலையில் உள்ளது. அதன் விளைவாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார சிக்கல், நாடுகளுக்கிடையே அச்சம் ஆகியவை உருவாகின்றன.

சாதாரண மனிதர்கள் பாடுபட்டு கட்டிய வீடுகளும், பேணி வளர்த்த பிள்ளைகளும்—எங்கிருந்தோ விழும் குண்டுகளால் சில நொடிகளில் அழிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் கேட்கிறான்: “கடவுள் எங்கே?”

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய உலகின் முக்கிய மதங்களின் பிறப்பிடமாக மத்திய கிழக்கு பகுதி இருக்கிறது. பண்டைய நாகரிகங்களிலும் (பாபிலோனியா, எகிப்து) பல கடவுள் நம்பிக்கைகள் இருந்தன. ஆனால் இன்று கேள்வி:

எந்தக் கடவுளிடம் நாம் செபிப்பது? எந்தக் கடவுள் இந்தப் போரை நிறுத்துவார்?

  • ஒரு மனிதன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சாக்கடையில் விழுந்துவிடுகிறான். முதல் இருவர் உதவ முயல்கிறார்கள்; ஆனால் தூரத்தில் இருந்து (கம்பு மற்றும் கயிற்றின் உதவி கொண்டு). ஆனால் முடியவில்லை.
  • மூன்றாவது ஒருவர் தாமதிக்காமல் உள்ளே குதித்து, தனது தோள்களில் அவனைச் சுமந்து காப்பாற்றுகிறார்.
  • அவரே இயேசு!.

மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் (இதிகாசங்கள்/நீதி நூல்கள்); ஆனால் இயேசு உள்ளே இறங்கி காப்பாற்றுகிறார்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மாயையில் வாழும் இஸ்ரேல் மக்கள், தங்கள் மதமே உயர்ந்தது என்று கூறும் இஸ்லாம் மதம், கடவுளின் பெயரால் பழிவாங்கத் துடிக்கும் குழுக்கள்—யாரும் இதுவரை போரை நிறுத்தவில்லை.

ஆனால் இயேசு இந்த வார நிகழ்வுகளில் அவரை கொல்ல திட்டமிடுவார்கள் - அவரை தீர்ப்பிடுவார்கள் - அவரை இகழ்வார்கள். ஆனால் அவர் எதிர்த்து போராடவில்லை; போர்க்கொடி தூக்கவில்லை. எசாயா 50:4–7ல் கூறும் துன்புறும் ஊழியனைப் போல: அடிப்போருக்கு முதுகை கொடுத்தார் - இகழ்ச்சியைத் தாங்கினார் - முகத்தை மறைக்கவில்லை - இயேசு சிலுவையைச் சுமக்கிறார்.

  • கடவுள் இந்தப் போரைக் கண்டும் காணாதவரல்ல. அவர் சிலுவையில் இருக்கிறார்.
  • காயமடைந்தவர்களுடன், அழும் குழந்தைகளுடன், அகதிகளுடன்
  • இயேசுவே துன்புறும் மக்களாக மாறுகிறார்.

இந்த குருத்து ஓலை ஞாயிறு நம்மை அழைக்கிறது: குருத்தோலை மட்டும் ஏந்தாதீர்கள்; சிலுவையையும் ஏந்துங்கள்.

எப்படி? நீதியின் பொருட்டு துன்புறும் ஒவ்வொரு மக்களுக்காக ஜெபிப்பதன் மூலம், அமைதிக்காக வேண்டுவதன் மூலம், போருக்கு எதிராக உள்ளத்தில் மாற்றம் கொண்டதன் மூலம்

ஜெபம்: ஆண்டவரே, போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கண்ணீர் வடிக்கும் மக்களுடன் நீர் இருங்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தாரும். தலைவர்களின் இதயங்களை மாற்றும். ஆயுதங்களை அமைதியாக மாற்றும். இந்த உலகிற்கு உமது சமாதானத்தை அருளும்.

Popular Posts