Showing posts with label salt light. Show all posts
Showing posts with label salt light. Show all posts

Saturday, February 7, 2026

உப்பாகவும், ஒளியாகவும் - பொதுக்காலம் 5 ஞாயிறு


எசா 58:7-10. 1 கொரி 2:1-5. மத் 5:13-16

சிலருக்கு பவுர்ணமி இரவில் தூக்கம் குறையலாம். அமாவாசை நாட்களில் மன அழுத்தம் இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இருள் இருந்தாலோ, முழு நிலா, புதிய நிலா இருந்தாலோ மனநலத்தை பாதிக்கலாம் என்று கூறுவார்கள்.

இன்று நற்செய்தியில் இயேசு "மனிதர்முன் ஒளிர்க!" என்கிறார். கிறிஸ்தவர்கள் அடுத்தவர்கள் முன் ஒளிர வேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு!

இன்று நாம் ஒளிர்கிறோமோ இல்லையோ நம்மைச் சுற்றி நிறைய ஒளிரிகள் இருக்கின்றன. நம்முடைய கைகளில் ஒட்டிப்போன ஸ்மார்ட்ஃபோன், நமக்கு முன் ஒய்யாரமாக சுவரில் அறையப்பட்ட எல்இடி டிவி, நம் மடிக்கணினி திரை, அறையின் ஒளிவிளக்குகள் என நம்மைச் சுற்றி நிறைய ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை நோக்கி நம் கண்கள் இயல்பாகவே செல்கின்றன. இவை ஒளிரும்போது நாம் ஒளிர வேண்டாமா?

‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் … நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ என்கிறார் இயேசு. 

எதற்காக ஒளி: தொடக்க நூலில் கடவுள், “ஒளி உண்டாகுக” என்றார். ஒளி உண்டாயிற்று. அதை நல்லது என கண்டார். ஒளியே இறைவனின் முதல் படைப்பு. 
அனைத்து மதங்களும் ஒளியை கடவுளாக வழிபடுகின்றனர். இந்துக்கள் கார்த்திகை தீபத்தின் போது, முஸ்லிம்கள் இறைவனை ஒளியாய் வழிபடுகின்றனர். 
இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் இருந்து விடுதலை பெற்று கானா நாட்டுக்கு நகர்ந்த போது கடவுள் நெருப்பு தூணாய்/ நெருப்பு ஒளியாய்  மக்களை வழி நடத்துகிறார்.
இயேசுவின் சமகாலத்து பாலஸ்தினாவில் தீப்பெட்டிகள் கிடையாது . மாறாக, அரிக்கேன் விளக்கு மட்டுமே. அதனாலே, எல்லா வீடுகளிலும் விளக்கு எப்போதும் அணையாமல் இருக்கும். அரிக்கேன் விளக்கை அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும், திரியைச் சுருக்கி எரியவிடுவதும் இன்னும் கிராமங்களில் வழக்கத்தில் இருக்கிறது. 

நற்செய்தி உண்மைகள்:

  • நாம் ஒளியாக பிறருக்கு பயன்பட வேண்டும்,
  • பிறருக்கு கடவுளை அடையும் வழியை நம் அனுபவத்தின் மூலமும், முன்னுதாரணம் மூலமும் காட்ட வேண்டும்.
  • உன் வாக்கு என் கால்களுக்கு விளக்கும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது (தி பா 119.8) நல்ல வார்த்தைகளை கூறி பிறரை நல்வழிப்படுத்தவேண்டும். 

“மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்”  

அரண்மனை காய்கறி தோட்டத்தை அரசர் பார்வையிடச் சென்றார்.  அமைச்சர்கள் அவருக்கு பின்னர் சென்றனர். அரசர் செடியிலிருந்து ஒரு கத்திரிக்காயை பரித்து அதன் அழகை வர்ணித்தார், "என்னே அழகு, எவ்வளவு அருமையான நிறம்" என்று புகழ்ந்தார். ஆமாம் ஆமாம்! காய்கறிகளிலேயே சிறந்ததாக அல்லவா இறைவன் இதை படைத்திருக்கிறார்" என்று அமைச்சர்கள் ஒத்திசை பாடினார்கள். பின்னர் அரசர் "ஆனால் ருசி அவ்வளவாக நன்றாக இருக்காதே, அதிக சத்தும் இல்லையே" என்றார். அவர்கள், "உண்மைதான் அரசே, உணவு பொருள்களிலேயே மோசமானது இந்த கத்திரிக்காய்தான். கத்திரிக்காயை சாப்பிடுவதை விட விஷத்தையே சாப்பிடலாம்” என்று அரசருக்கு மீண்டும் ஒத்திசை பாடினார்கள். அரசர் அவர்களை அதிருப்தியுடன் பார்த்து, "நான் புகழும்போது நீங்களும் புகழ்கிறீர்கள். இகழ்ந்தால் அதைவிட கேவலமாக பேசுகிறீர்கள். நீங்கள் எல்லாம் எவ்வகையான மனிதர்கள்" என்று சாடினார். அவர்கள் "அரசே நாங்கள் உங்களுடைய உப்பை தின்கிறோம்! கத்திரிக்காயினுடைய உப்பை அல்ல, ஆகவே உங்களுக்குதான் ஒத்திசை பாடுவோம்" என்று பதில்ளித்தனர் .      

உப்புக்கு பிரமாணிக்கமாயிருக்க வேண்டும். உப்பு சுவையூட்டும் பொருள் மட்டுமல்ல மாறாக உணவைப் பாதுகாக்கும் பொருள். மருத்துவர்கள் உப்பை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.  முதல் ஏற்பாட்டில் உப்பு பலி பொருட்களில் சேர்க்கப்படுகின்றது (லேவியர் ஆகமம்) காரணம் உப்பு இயல்பாகவே தூய்மை தன்மை உடையது.

நீங்களும் உப்பாக இருக்க வேண்டும் என்றால், ஒருவருக்கொருவர் அரணாக இருந்து மற்றவரை பாதுகாக்க வேண்டும்.

ஆக, உப்பு தன்னுடைய உவர்ப்புத்தன்மையாலும், ஒளி தன்னுடைய ஒளிரும் தன்மையாலும் மற்றவர்களின் வாழ்வுக்குப் பயன்தர வேண்டும். 

இன்று நாம் மனிதர்முன் எப்படி ஒளிர்வது? உப்பாக செயல்படுவது?

1. பிறரது குற்றங்களோடு ஏற்றுக் கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொள்ள அவருக்கு வழிகாட்ட ஒளியாகவும், உப்பாகவும் செயல்பட வேண்டும். Fraternal Correction நம் கிறித்தவ வாழ்வின் கடமை. காயினின் பதிலை நாம் கூறக்கூடாது, "நான் என்ன சகோதரனின் காவலாளியா?" உப்பைப் போன்று மனிதர்மேல் பொறுப்புணர்வு கொண்டவர்கள். ஒளியைப் போன்று வழிகாட்டப்பிறந்தவர்கள். 

2. அன்பும் அக்கறையும் கொண்டு வழி காட்ட வேண்டும். சில சமயம் “இவன் எக்கேடும் இட்டுக் கெட்டுப் போனால் என்ன?,  இவனுக்கு நல்லா வேணும். எனக்கு அப்பவே தெரியும்”  மனப்பான்மை அறவே கூடாது. 

3. முன்மாதிரியான வாழ்வு மூலம் வழி காட்ட வேண்டும்.  பிள்ளைகள் பெற்றோர்களுடைய வார்த்தைகளை கேட்பதில்லை, செயல்களை பின்பற்றுகிறார்கள். கிறீஸ்து தன் சான்று வாழ்வு மூலம் வழிநடத்தினார். 

நம்முடைய செயல்களால் இறைவன் அதாவது நம்முடைய விண்ணகத்தந்தை மாட்சி பெற வேண்டும். ஒரு குழந்தையின் செயலைக் கண்டு அதன் தாயையும் தந்தையையும் பாராட்டுவதுபோல இறைவன் பாராட்டப்பட வேண்டும். ஏனெனில், சீடத்துவம் என்னும் உவர்ப்புத்தன்மையின் ஊற்றும், ஒளிரும்தன்மையின் ஊற்றும் அவரே. உப்பு தன்னையே அழித்து, மறைத்து, தன் இயல்பை இழந்து உணவோடு கலக்கும்போது சுவை தருகிறது. தனித்து நிற்றலில் அல்ல, மாறாக, கலந்துவிடுவதில்தான் உப்பின் பயன்பாடு இருக்கிறது. ஒளி தன் இருப்பைவிட்டு கடந்து நிற்றால்தான் மற்றவர்களுக்குப் பயன்தர முடியும். 


Popular Posts