ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், திங்கள்
தானியேல் 1:1-6, 8-20. லூக்கா 21:1-4
(Thanks: Fr. Yesu Karunanidhi, blogger)
கண்ணீரும் காசும்
‘இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை’ என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். ‘கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்’ என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.
இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை’ நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை ‘கைம்பெண்’ என அழைக்க, லூக்கா மட்டும், ‘அவர் வறுமையில் வாடியவர்’ என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.
நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:
(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்
‘பற்றாக்குறை’ என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.
(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்
அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.
(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்
வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது.
லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை’ என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, ‘அன்றைய நாளைப் பற்றிக் கூட’ அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.
நிற்க.
இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. ‘கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்’ என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா?
கைம்பெண்களின் கடைசிக் காசைப் பெற்றுத்தான் ஆலயமும் ஆலயத்தின் குருக்களும் வாழ வேண்டுமெனில் அத்தகைய அமைப்புகள் தேவையா? அமைப்பை உடைப்பதை விடுத்து அமைப்புக்குள் மக்கள் தங்களையே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல இருக்கிறது இயேசுவின் செயல்பாடு. இன்றும் சில நேரங்களில் சில இடங்களில், ‘ஏழைக் கைம்பெண் போல அனைத்தையும் காணிக்கை போடுங்கள்’ என்று அருள்பணியாளர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் வானளவாகக் கோவில் கட்டவும், ஊர் பாராட்ட சப்பரம் இழுப்பதற்கும் இன்றும் ஏழைகளும் கைம்பெண்களும் தங்கள் கடைசிக் காசுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுடைய கண்ணீரும் நம் ஆசையும் ஒருபோதும் குறைவதில்லை!