Showing posts with label wake up from sleep. Show all posts
Showing posts with label wake up from sleep. Show all posts

Saturday, December 20, 2025

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு (A)

எசாயா 7:10-14. உரோமையர் 1:1-7. மத்தேயு 1:18-24

ஒரு ரீல் நினைவுக்கு வருகிறது. "வாழ்க்கையில பெருசா சாதிக்கணும்னு நினைக்கும் போது பசி வருகிறது. சரி, சாப்பிட்டு சாதிக்கலாம் அப்படின்னு நினைக்கும்போது, தூக்கம் வருகிறது. பசியையும் தூக்கத்தையும் ஜெயிப்பவனால் மட்டுமே சாதிக்க முடியும்."

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் செலவிடுகிறானாம். தூக்கம் நேரம் வீணாக்கம் அல்ல; அது தனது வாழ்க்கையை சீரமைக்கும் அவசியமான ஓய்வு.  எங்கள் மனநலக காப்பகத்தில் உள்ள பலர் எதனால் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றால் பலருக்கு தூக்கமின்மை பெரிய வியாதியாக இருக்கிறது. ஒரே ஒரு நாள் கூட நல்ல தூக்கம் இல்லாவிட்டால், எரிச்சல், கோபம் போண்ற மன நோய்கள்
அதிகரிக்கும். தூக்கம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தினமும் 6 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்குபவர்கள் அடிக்கடி நோயுற்றுவிடுவார்கள். “தூக்கம் சோம்பல் அல்ல; அது உடல் சொல்லும் குரலைக் கேட்கும் ஞானமே அது.”

இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும், அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.

முதல் வாசகம்: கிமு 735-ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசன் அசீரியாவை எதிர்க்க திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான்.  இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார்: ‘பயம் வேண்டாம். ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’ (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். ஆக, அச்சம் என்னும் தூக்கத்திலிருந்த ஆகாசு ஆண்டவராகிய கடவுள் எசாயா வழியாக அருளிய அடையாளத்தால் துணிவுக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), முதலில், பவுல் தன்னைப் பற்றி பதிவு செய்கின்றார் – ‘இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,’ ‘திருத்தூதன்,’ மற்றும் ‘நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.’ ஆண்டவராகிய திருஅவையை, ஆண்டவரின் திருஅவையை அச்சுறுத்துவதற்காகத் தமஸ்கு புறப்பட்ட சவுல் தூக்கத்திலிருந்து விடுதலை பெறுகின்றார். புதிய அடையாளங்களைப் பெற்றுக்கொள்கின்றார். இரண்டாவதாக, ‘தாவீதின் மரபினரான இயேசுவே கடவுளின் மகன்’ என முன்மொழிந்து பிறஇனத்தார் அனைவரையும் நம்பிக்கைக்கு விழித்தெழச் செய்கின்றார். ஆக, நம்பிக்கையின்மை என்னும் தூக்கத்திலிருந்த பவுல் (மற்றும் பிறஇனத்தார்) இயேசு கிறிஸ்து தமஸ்கு வழியில் தோன்றிய நிகழ்வு வழியாக நம்பிக்கைக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் ‘பெயரிடும் நிகழ்வால்’ உறுதிசெய்யப்படுகிறது. நிகழ்வில் அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த யோசேப்பு திடீரென தூங்கிவிடுகின்றார். கனவில் ஆண்டவரின் தூதர் அவரிடம் பேசுகின்றார். இரு செய்திகள் தரப்படுகின்றன. ஒன்று, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான். இரண்டு, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய பெயர்.

Sleeping St. Joseph

வாழ்வின் எதார்த்தங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, உடனடியாகத் தூங்கிவிடுதல் நலம்
என்பது யோசேப்பு தருகின்ற முதல் பாடமாக இருக்கின்றது.  கடவுளின் திட்டங்கள் நமக்கு புரியாத போது, இந்த வாழ்வு நம்மை அலைக்கழிக்கும் போது, பலருடைய விமர்சனங்களால் நாம் கூனி குறுகி நிற்கும்போது, பல தோல்விகளை சந்தித்து துவண்டு விழும்போது நாமும் தூங்கியாக வேண்டும். ஆனால்,  ஆனால் கடவுளின் வெளிப்படுத்துதலுக்காக ஆயத்தமாய் இருக்க வேண்டும். காதுகளை தீட்டிக்கொண்டு செவிமடுக்க வேண்டும். நிராகரித்தல் என்னும் தூக்கத்திலிருந்த யோசேப்பு கனவில் நிகழ்ந்த வெளிப்பாட்டின் வழியாக ஏற்றுக்கொள்தல் என்னும் நிலைக்கு விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்று நம் வாழ்வில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் நிலைகளில் இருக்கக் காரணம் நாம் கொள்ளும் அச்சம், நம்பிக்கையின்மை, மற்றும் நிரகாரித்தல் ஆகியவைதாம். இவற்றால்தாம் நம் அமைதியும் நிலைகுலைகிறது. தனிப்பட்ட வாழ்வு பற்றிய அச்சம், இறைவன்மேல் நம்பிக்கையின்மை, மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும் நிரகாரித்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விழித்தெழ வேண்டும் எனில் என்ன செய்வது? இறைவனின் குறுக்கீட்டைக் கண்டடைந்து அதை உறுதியாகப் பற்றிக்கொள்வது.

திருத்தந்தை பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர் Sleeping St. Joseph என்ற ஒரு பக்தி முயற்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது ஒரு அருட்சகோதரி கொடுத்த இந்த Sleeping St. Joseph சுரூபத்தை  எப்போதுமே தன்னுடைய தலையணைக்கு அருகில் வைத்துக்கொள்வாராம். தூங்கும் போது தன்னுடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ துன்பங்கள் கவலைகள் அனைத்தையும் திரு அவையின் சவால்களையும் ஒரு பேப்பரில் எழுதி அந்த சிலையின் அடியில் வைத்து தூங்கச் செல்வார். தூங்கும்போது கடவுள் நம் பிரச்சனைகளை சரி படுத்துகிறார். ஆகவே வருடம் முடிவில் தான் கவனித்தாராம் ஏராளமான பேப்பர்கள் அங்கே இருந்தன.  

திருவருகைக்காலத்தின் நான்காம் (இறுதி) வாரத்திற்குள் நுழையும் நாம் இறைநம்பிக்கை வைத்தபடி, பிரச்சினைகளை கடவுளிடம் கையளித்தபடி, அயர்ந்து தூங்குவோம். இறை வார்த்தையின் படி செயல்படுவோம். விழித்தெழுந்து அமைதியின் அரசரைக் கண்டுகொள்வோம்.

Popular Posts