இயக்குனர் Guillermo del Toroன் திரைப்படங்களின் அடிநாதமாக பரிசுத்தமான அன்பு இழையோடும். யார்யார் மீதெல்லாம் எதன் மீதெல்லாம் அன்பே வராது என்று வரையறுக்கப்பட்டதோ, அதன் மீது மட்டுமே அன்பை வாரிக்கொடுக்கும் ஒரு கதாபாத்திரம் படத்தினுள் இருக்கும். அந்தக் கதாபாத்திரம் எப்படியான அன்பிற்குள் திகழ்கிறதோ அவ்வாறாக பார்வையாளர்களை திகழ வைத்துவிடுவது Guillermo del Toroவின் மாயம்.
1818ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் 'Frankenstein' இன்று வரை மொத்தம் 423 முழுநீள திரைப்படங்கள், 204 குறும்படங்கள், 78 தொலைக்காட்சி தொடர்களில் இந்த நாவல் எடுத்தாளப் பட்டிருக்கிறது. இப்போது Guillermo del Toro இயக்கத்தில் ஒரு வடிவம்,
இது முற்றிலும் நாவலைத் தழுவியது என்று சொல்ல முடியாது, நாவலின் சில பகுதிகளை எடுத்து, சில மாற்றங்கள் செய்து அதன் மீது Guillermo del Toro தன் முத்திரையைப் பதித்து இருக்கிறார். இந்த இயக்குனர் ஹாலிவுட்டின் சிறந்த இயக்குனர் என்றே சொல்வேன். The Shape of Water க்காக சிறந்த இயக்குனர் விருது பெற்றவர்.
கதை: மருத்துவர் victor Frankensteinக்கு விபரீத எண்ணம் ஒன்று உண்டாகிறது. இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும். பல்வேறு இறந்தவர்களின் உடலில் இருந்து ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஒன்றாக இணைத்து ஒரே ஆளாக ஓர் உயிரை உண்டாக்கிவிடவேண்டும், அதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறார். அரசாங்கம் இதனை கடவுளுக்கு எதிரான செயல் என மறுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் துணையோடு இந்த ஆராய்ச்சியை செய்து ஒரு மனிதனை உண்டாக்கியும் விடுகிறார். அந்த மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை. அவனை யாராலும் அழிக்கவும் முடியாது. அளப்பரிய உடல் பலத்தோடு இருக்கிறான், எல்லா காயங்களும் உடனுக்குடன் தாமாகவே ஆறிவிடுகின்றன. எந்த ஆயுதமும் அவனை சாகடிக்காது. இத்தனை ஆற்றல் இருக்கக் கூடிய ஒருவன் மனிதன் அல்ல மிருகம் என நினைக்கிறார் victor Frankenstein. தன் முயற்சி தோல்வி அடைந்து விட்டது. தன்னால் ஒரு மிருகத்தை தான் உண்டாக்க முடிகிறது. மனிதனை அல்ல என்று நினைத்து அவனை அழிக்கப் பார்க்கிறார். அவன் ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகைப் பற்றி அறிந்து, ஒரு குழந்தை எப்படி எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறதோ அவ்வாறாக கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொண்டு தாம் ஒரு மனிதனே அல்ல என்பதைத் தெரிந்துகொள்கிறான்.
மனிதனின் சகல உணர்வுகளோடும், தானொரு மனிதனே இல்லை எனும் கவலையோடும், தன்னால் சாகவே முடியாது எனும் கொடூரமான உண்மையைத் தாளமுடியாமலும் தன்னை உண்டாக்கிய victor Frankenstein- ஐ தேடித் போகிறான். "என்னால் தனிமையாக இருக்க முடியவில்லை, நீ என்னை ஏதோ விலங்குஎன நினைத்து அழிக்கப் பார்த்தாய். ஆனால் எனக்குள் மனித உணர்வுகள் இருக்கின்றன, என்னை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் எனக்கு என்னைப் போலவே இன்னொரு துணையை உண்டாக்கித் தா" விக்டர் மறுக்கிறார். - அப்படியெனில் நீ அழிய வேண்டும் என்னை உண்டாக்கி இந்த நிலைக்கு ஆளாக்கிய நீ, நான் அடையும் எல்லா துயரங்களையும் அடையவேண்டும். வலியை அனுபவிக்க வேண்டும். என்று விக்டரை துன்புறுத்தத் தொடங்குகிறான். ஒன்று நீ அழி. அல்லது என்னை அழித்து விடு.
விடுதலையும் இல்லாமல் சிறையும் இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை நரகம்.
கதை இரண்டு கோணங்களாக சொல்லப் படுகிறது, ஒன்று மருத்துவர் victor Frankensteinன் கோணத்தில், அவர் எப்படி இந்த ஜந்துவை உண்டாக்கினார் அதனை எப்படி அழிக்கப்பார்த்தார் என்பது வரை, அதற்குப் பிறகு, ஜந்துவின் கோணத்தில் கதை நகர்கிறது. ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பித்து வெளியுலகை அறிந்து கொண்டு, தாம் யார் என்பதை கண்டறிந்தது வரை. கதையின் போக்கில் நமக்கு ஜந்துவின் மீது பரிவு வந்துவிடுகிறது. காரணம் அவன் களங்கமற்ற மனிதனாக இருக்கிறான். அழுக்குகள் அற்ற ஆன்மாவாக இருக்கிறான். உலகின் தீங்குகள் பற்றி அறியாதவனாக இருக்கிறான்.
அவன் மீது எலிசெபத்க்கு வருகின்ற பிரியம்-காதல் புரிந்துகொள்ளக் கூடியதே! - The Shape of Waterன் எலிசா தான் நினைவுக்கு வந்தாள். (அற்புதமான இன்னொரு படம்!)
"To be lost and to be found, that is the lifespan of love."

No comments:
Post a Comment