Tuesday, December 2, 2025

International Day of Persons with Disability (December 3)

இன்று புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலரின்
பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதே நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.  நமது சபைக்கு மிகவும் நெருக்கமான இந்த மாற்றுத்திறனாளிகளை பற்றி ஒருசில சிந்தனைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
  • சமூகத்தில் ஏன் இந்த மாற்றுத்திறனாளிகள்?
  • கடவுள் எதற்காக இவ்வுலகில் ஊனமுற்றவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் படைத்தார்? 
  • எதற்காக இத்தனை குறைபாடுகள், ஏனிந்த ஊனங்கள்? 

விவிலியத்தின் தொடக்க நூலின் அனைத்து மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட உள்ளார்கள் என்று வாசிக்க காண்கிறோம் (தொ.நூ 1:27) 

அன்றைய காலத்தில் ‘ஊனம்’ என்பது கடவுளின் தண்டனை அல்லது சாபம் என்று மக்கள் நம்பினர். ஆனால் விவிலியம் “கடவுளின் செயல்கள் ஊனம் மூலம் வெளிப்படுத்தப்படலாம்” என்று கூறுகிறது. "கடவுளின் செயல்கள் அவரில் வெளிப்படும் பொருட்டு இது நடந்தது." - (யோ 9:3) ஊனம் என்பது ஒரு குறைபாடு அல்ல. கடவுள் அவர்களின் மூலமும் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.


19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் லூயிஸ் குவனெல்லா “மாற்றுத்திறனாளிகள் கடவுளின் பரிசுகள்” என்று கூறினார். அவர்கள் விண்ணகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடவுளின் தேவதூதர்கள்.  மாற்றுத்திறனாளிகளை “செல்ல குழந்தைகள்” என்றழைத்தார். 

ஒரு அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தவன் வளர்ந்து மருத்துவராகி சாதிக்கத் துவங்கி விட்டான். இளையவன் இன்ஜினியராகி இல்லத்தில் இனிதே நுழைந்து விட்டான். மூன்றாவது மகனோ, இரண்டு கால்களையும் இளம்பிள்ளை வாதத்தால் இழந்து, வாழ்க்கையை வருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார். 

இந்த மூவரில் அப்பாவின் பாசத்துக்குரிய செல்ல மகன் யார்? சந்தேகமே இல்லாமல் ஊனத்தோடு பிறந்த மூன்றாவது மகனே தந்தையின் பார்வையில் செல்ல குழந்தையாய் தெரிகிறான். 

கடவுளைத் தந்தையாக பாவித்த அவருக்கு "செல்லக் குழந்தையாக" தெரிகிறார்கள், இந்த உலகின் கடை எல்லை வரை ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள். போலிகளைப் படைத்து வெறுத்து போன இறைவன் ஒரு மாற்றத்திற்காக உண்மை உயிரை, முழுமையற்ற உடலுக்குள் வைத்து படைத்தார். அவர்கள் தான் கடவுளின் பிரதிநிதிகள். இந்தப் புரிதலினாலே மிகவும் நெருக்கமாக தான் அன்பு செய்த, உடல் நலம் குன்றிய குழந்தைகளை தான் தோற்றுவித்த சபைகளின் முதன்மைப் பணியாக செய்தார்.

ஒருமுறை கோமோ நகர ஆயர் அவர்கள் அந்நகரத்தில் குவனெல்லா தோற்றுவித்த இல்லமான இறைபராமரிப்பு இல்லத்தின் கதவுகளைத் தட்டி தான் குவனெல்லாவைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அந்த இல்லத்து பணியாளர் ஒருவர், "தந்தை குவனெல்லா, தனது இல்லத்தில் செல்லக் குழந்தைகளோடு சீட்டு விளையான்டு கொண்டிருப்பதைக் கூறினார்". இதைக் கேட்டவுடன் சிறிது அப்சட்டான ஆயர், “மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் விளையாட வாய்ப்பில்லை. புனிதரை விரைவில் அழைத்து வாருங்கள்” என்றார். அந்த பணியாளரோ, "ஆம் ஆயர் அவர்களே! செல்லக் குழந்தைகளை உயர்ந்தவர்களாக மதிக்கும் வரை அவர்களுக்கு விளையாட்டுகள் புரியப் போவதில்லை” என்றார். பிறகு என்ன! ஆயர் நீண்ட நேரம் விளையாட்டு முடியும் வரை இருந்து குவனெல்லாவை சந்தித்து தான் சென்றார். செல்லக் குழந்தைகள் தான் அவரது நிறுவனத்தின் முதலாளிகள். அவர்களின் நிமிடத் துளிகளை மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு, தன்னுடைய மணித்துளிகளையும் செலவிட தயங்கவில்லை.

அன்பின் பணியாளர் சபையைத் துவங்கிய நேரங்களில் தனது சபையில் சேர விரும்பும் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்திட ஒவ்வொரு மறைமாவட்ட பங்குகளிலும் சென்று இறையழைத்தல் கூட்டம் ஏற்பாடு செய்தார். அவர் எப்போது வெளியே சென்றாலும் தன்னோடு ஐந்தாறு செல்ல குழந்தைகளையும் கூட்டிச் செல்வார்கள். ஒருமுறை கோமா நகரத்து பங்கு இளைஞர்களை சந்தித்தபோது குவனெல்லாவோடு வந்திருக்கிற செல்லக் குழந்தைகளை பார்த்து அவர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு தந்தை குவனெல்லா, “இந்த சிறப்பு குழந்தைகளிடம் உங்களிடமும், என்னிடமும் இல்லாத ஆற்றல் ஒன்று உள்ளது. ஏனெனில் அவர்கள் கடவுளின் சிறப்பு அருள் பெற்றவர்கள் (Innocence and angelic grace).  

செல்லக் குழந்தைகளை எந்த வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்கள் அன்பின் பணியாளர் சபையில் சேரலாம். பட்டப்படிப்புகளும், நூலகங்களும் தர முடியாத அனுபவங்களை இவர்களின் அருகாமையில் அறிந்து கொள்ளலாம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகம் அறிவியலின் பயனை அனுபவிக்கும் உலகம். இங்கு அறிவு தான் அனைத்தையும் அளக்கும் அளவுகோல்! தோற்றம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் கருவி! அழகை கண்டு கொள்வதும் அன்பு செய்வதும் மனிதருக்கு மிக எளிது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மறைந்து கிடக்கும் திறன்களையும் அறிந்த அன்பு செய்வது என்பது மிக அரிது.

இன்றைய தினத்தில் நமது இல்லங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இருக்கும் அனைத்து இருக்கும் அனைத்து மாற்று திறனாளிகளும் அன்பு, அரவணைப்பு மற்றும் கண்ணியம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தி ஜெபிக்கும் குவனெல்லிய இல்லங்கள். 


No comments:

Post a Comment

Popular Posts