Monday, December 1, 2025

The Face of the Faceless (2025)

சினிமா துறையில் நமது மண்ணைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ படம் 2024ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, 123க்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்திருக்கிறது, அது, மாதா டிவி பெருமையுடன் வழங்கி வெளியிட்ட "ஃபேஸ் ஆப் தி பேஸ்லஸ்". "முகம் இல்லாதவர்களுக்கு முகமாக" என்னும் இந்தியத் திரைப்படம். 

1954ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து வளர்ந்த ராணி மரியா (அருட்சகோதரி) மத்திய பிரதேசத்திலே உள்ள உதயநகர் என்னும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே கொடுத்த ஒரு உண்மை கதைதான் இந்தப் படம். அவர்களுக்கு படிப்பு வசதி இல்லாது, ஏழ்மையான நிலையில் மிகவும் தாழ்வுற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த மக்களை முன்னேற்ற களத்தில் இறங்குகிறார். ஆனால் இதை அந்த பழங்குடியின மக்களே புரிந்து கொள்ளவில்லை, அவரை அடித்தும் விரட்டுகிறார்கள்.


ராணி மரியா தான் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் தொடர்ந்து அந்த மக்களுக்காக உதவுகிறார். தன்னுடைய கண்முன்னே நடக்கக்கூடிய அநீதிகளை எல்லாம் தட்டி கேட்கிறார்,  குழந்தைகளுக்கு படிப்பு, தொழில் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த உதவுகிறார். ஆதிக்க சக்திகள், நில உடமையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். இறுதியில் ராணிமரியா அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

புதுமுக இயக்குனர் 'சாய்ச்சன் பி ஓசப்' மக்களுக்கு நல்ல ரியாலிட்டி வாழ்வை ஒரு கதையாக எடுத்துச் சொல்ல முயற்சித்ததற்காகவே ஒரு விசில். வின்சி அலோசியஸ் தான் ராணிமரியாவாகவே வாழ்ந்திருப்பது பாராட்டுக்குரியது. மாதா தொலைக்காட்சி தமிழிலும் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்தது துல்லியமான வேலை. அருட் சகோதரியோடு தொடர்ந்து ஒரு தோழியாகவே பயணம் செய்யக்கூடிய பழங்குடியினத்து பெண்ணாக சோனாலி என்பவர் நடித்திருக்கிறார். அவரும் உண்மையாகவே சிறப்பான ஒரு தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து பொருள் உணர்ந்து நடித்திருக்கிறார்.  

இந்த திரைப்படத்தில் பல உணர்ச்சி ததும்பக்கூடிய தருணங்களை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பழங்குடியின மக்களின் மூட நம்பிக்கையினால் ஒரு பெண்ணினுடைய மரணம்,  மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ராணிமரியாவின் தலைமையிலே கட்டிய சிறிய பள்ளிக்கூடம், கிணறு, கிராமதத்துக் குழந்தைகளின் எதார்த்தமான நடிப்பு இவையெல்லாம் படத்திற்கு ப்ளஸ். 

கிளைமாக்ஸில் அருட் சகோதரினுடைய தாய் கொலை செய்தனுடைய கரங்களை பற்றி பிடித்து கொண்டு, "என்னுடைய மகளின் இரத்தம் தோய்ந்த அந்த கரங்களை நான் முத்தமிடலாமா!" என்று சொல்லி முத்தமிட்ட அந்த காட்சி நம்முடைய கண்களை கலங்க வைக்கிறது. மன்னிப்பின் மகத்துவத்தை எடுத்துச் சொல்கிறது. நாம் எப்படிப்பட்ட நிலையிலும் மன்னிக்க முடியும் என்று கண்ணீரில் எண்ட் கார்டு போடுகிறார்கள். 

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தஃபேஸ் ஆப் தி பேஸ்லெஸ் திரைப்படம் "சிறந்த கிறிஸ்தவ திரைப்படம்" என்று அறிவித்திருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும், கண்டு பகிர வேண்டிய நல்ல திரைப்படம். 

Overall Rating:  6.0 / 10

No comments:

Post a Comment

Popular Posts