Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts

Monday, December 1, 2025

The Face of the Faceless (2025)

சினிமா துறையில் நமது மண்ணைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ படம் 2024ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, 123க்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்திருக்கிறது, அது, மாதா டிவி பெருமையுடன் வழங்கி வெளியிட்ட "ஃபேஸ் ஆப் தி பேஸ்லஸ்". "முகம் இல்லாதவர்களுக்கு முகமாக" என்னும் இந்தியத் திரைப்படம். 

1954ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து வளர்ந்த ராணி மரியா (அருட்சகோதரி) மத்திய பிரதேசத்திலே உள்ள உதயநகர் என்னும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே கொடுத்த ஒரு உண்மை கதைதான் இந்தப் படம். அவர்களுக்கு படிப்பு வசதி இல்லாது, ஏழ்மையான நிலையில் மிகவும் தாழ்வுற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த மக்களை முன்னேற்ற களத்தில் இறங்குகிறார். ஆனால் இதை அந்த பழங்குடியின மக்களே புரிந்து கொள்ளவில்லை, அவரை அடித்தும் விரட்டுகிறார்கள்.


ராணி மரியா தான் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் தொடர்ந்து அந்த மக்களுக்காக உதவுகிறார். தன்னுடைய கண்முன்னே நடக்கக்கூடிய அநீதிகளை எல்லாம் தட்டி கேட்கிறார்,  குழந்தைகளுக்கு படிப்பு, தொழில் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த உதவுகிறார். ஆதிக்க சக்திகள், நில உடமையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். இறுதியில் ராணிமரியா அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

புதுமுக இயக்குனர் 'சாய்ச்சன் பி ஓசப்' மக்களுக்கு நல்ல ரியாலிட்டி வாழ்வை ஒரு கதையாக எடுத்துச் சொல்ல முயற்சித்ததற்காகவே ஒரு விசில். வின்சி அலோசியஸ் தான் ராணிமரியாவாகவே வாழ்ந்திருப்பது பாராட்டுக்குரியது. மாதா தொலைக்காட்சி தமிழிலும் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்தது துல்லியமான வேலை. அருட் சகோதரியோடு தொடர்ந்து ஒரு தோழியாகவே பயணம் செய்யக்கூடிய பழங்குடியினத்து பெண்ணாக சோனாலி என்பவர் நடித்திருக்கிறார். அவரும் உண்மையாகவே சிறப்பான ஒரு தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து பொருள் உணர்ந்து நடித்திருக்கிறார்.  

இந்த திரைப்படத்தில் பல உணர்ச்சி ததும்பக்கூடிய தருணங்களை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பழங்குடியின மக்களின் மூட நம்பிக்கையினால் ஒரு பெண்ணினுடைய மரணம்,  மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ராணிமரியாவின் தலைமையிலே கட்டிய சிறிய பள்ளிக்கூடம், கிணறு, கிராமதத்துக் குழந்தைகளின் எதார்த்தமான நடிப்பு இவையெல்லாம் படத்திற்கு ப்ளஸ். 

கிளைமாக்ஸில் அருட் சகோதரினுடைய தாய் கொலை செய்தனுடைய கரங்களை பற்றி பிடித்து கொண்டு, "என்னுடைய மகளின் இரத்தம் தோய்ந்த அந்த கரங்களை நான் முத்தமிடலாமா!" என்று சொல்லி முத்தமிட்ட அந்த காட்சி நம்முடைய கண்களை கலங்க வைக்கிறது. மன்னிப்பின் மகத்துவத்தை எடுத்துச் சொல்கிறது. நாம் எப்படிப்பட்ட நிலையிலும் மன்னிக்க முடியும் என்று கண்ணீரில் எண்ட் கார்டு போடுகிறார்கள். 

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தஃபேஸ் ஆப் தி பேஸ்லெஸ் திரைப்படம் "சிறந்த கிறிஸ்தவ திரைப்படம்" என்று அறிவித்திருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும், கண்டு பகிர வேண்டிய நல்ல திரைப்படம். 

Overall Rating:  6.0 / 10

FRANKENSTEIN (2025)

Frankenstein – இறைவார்த்தையின் வெளிச்சத்தில் ஒரு பார்வை

Frankenstein திரைப்படம் வெறும் திகில் படமல்ல; அது மனிதன், படைப்பு, பொறுப்பு, மற்றும் அன்பு குறித்து கேள்வி எழுப்பும் ஒரு ஆழமான கருவைத் தாங்கிய திகில்படம். 

"இறைவன் தாம் படைத்த அனைத்தையும் நல்லதாகவே கண்டார்” (தொடக்கம் 1:31). இந்த உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் இறைவனிடமிருந்து வந்ததே. மனிதன் சிறு பொருட்களை உருவாக்கினாலுமே, அவன் இறைவனின் இடத்தைப் பிடிக்க முடியாது. 


1818ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் 'Frankenstein'  இன்று வரை மொத்தம் 423 முழுநீள திரைப்படங்கள், 204 குறும்படங்கள், 78 தொலைக்காட்சி தொடர்களில் இந்த நாவல் எடுத்தாளப் பட்டிருக்கிறது. இம்முறை Guillermo del Toro (The Shape of Water க்காக சிறந்த இயக்குனர் விருது பெற்ற ஹாலிவுட்டின் சிறந்த/பிரம்மாண்ட இயக்குனர் என்றே சொல்வேன்) இந்த கதையை செய்திருக்கிறார். 

கதை: மருத்துவர் victor Frankensteinக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஒன்று உண்டாகிறது. பல்வேறு இறந்தவர்களின் உடலில் இருந்து ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஒன்றாக இணைத்து ஒரே ஆளாக ஓர் உயிரை உண்டாக்கிவிடவேண்டும், அதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறார். அரசாங்கம் இதனை "கடவுளுக்கு எதிரான செயல்" என மறுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் துணையோடு இந்த ஆராய்ச்சியை செய்து ஒரு மனிதனை உண்டாக்கியும் விடுகிறார். அந்த மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை. அவனை யாராலும் அழிக்கவும் முடியாது. அளப்பரிய உடல் பலத்தோடு இருக்கிறான், எல்லா காயங்களும் உடனுக்குடன் தாமாகவே ஆறிவிடுகின்றன. எந்த ஆயுதமும் அவனை சாகடிக்காது. இத்தனை ஆற்றல் இருக்கக் கூடிய ஒருவன் மனிதன் அல்ல மிருகம் என நினைக்கிறார் victor Frankenstein. அதன் விளைவுகளை எப்படி சந்திக்கிறார் என்பதே கதை.   

Frankenstein இல் உருவாக்கப்படும் உயிர் ஒரு “அரக்கன்” அல்லஅவன் அன்புக்காக ஏங்கும் ஒரு படைப்பு. "என்னால் தனிமையாக இருக்க முடியவில்லை, நீ என்னை ஏதோ விலங்கு என நினைத்து அழிக்கப் பார்த்தாய். ஆனால் எனக்குள் மனித உணர்வுகள் இருக்கின்றன, என்னை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் எனக்கு என்னைப் போலவே இன்னொரு துணையை உண்டாக்கித் தா" விக்டர் மறுக்கிறார். "ஒன்று நீ அழி. அல்லது என்னை அழித்து விடு. நீ, நான் அடையும் எல்லா துயரங்களையும் அடையவேண்டும். வலியை அனுபவிக்க வேண்டும்" என்று விக்டரை துன்புறுத்தத் தொடங்குகிறான். 

  • அரக்கன் உருவானது ஆய்வகத்தில் அல்ல;
  • மனித இதயத்தில் அன்பு இல்லாத இடத்தில்தான்.

மனிதன் அன்பு செய்ய மறுக்கப் படும்போதுதான் விடுதலையும் இல்லாமல் சிறையும் இல்லாமல் நரகத்தை அனுபவிக்கிறான். திருவிவிலியம் கேட்கும் கேள்வி இதுதான்: “உன் சகோதரன் எங்கே?” (தொடக்கம் 4:9) இந்தக் கேள்வியே Frankenstein கதையின் மையம்.

நாம் உருவாக்கியதை, பெற்றதை, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை அன்போடு கவனிக்கிறோமா? இல்லையா? ஒவ்வொரு மனிதனையும் காயினாக மாற்றுவதும், இன்னொரு கடவுளின் சாயலாக மாற்றுவதும் நம் பார்வையில் தான் உள்ளது. அன்பில்லாத அறிவு அபாயமாக மாறும். பொறுப்பில்லாத படைப்பு அழிவை உருவாக்கும்.

படத்தில் அவன் மீது எலிசெபத்க்கு வருகின்ற பிரியம்-காதல் புரிந்துகொள்ளக் கூடியதே! - The Shape of Waterன் எலிசா தான் நினைவுக்கு வந்தாள். (இயக்குனரின் அற்புதமான இன்னொரு படம்!) அடித்து சொல்கிறோம் இயக்குனருக்கு விருது காத்திருக்கிறது. 

Frankenstein நமக்கு சொல்லும் இறைவார்த்தைச் செய்தி இதுதான்: "அன்பு இல்லாமல் எந்த உயிரும் மனிதராக மாற முடியாது".

Overall Rating:  8.0 / 10

Sunday, October 5, 2025

OPPENHEIMER (2023)

ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான 'அணுகுண்டின் தந்தை' எனக் கொண்டாடப்பட்ட காரணமயிருந்த ஓபன்ஹெய்மர் பற்றிய உண்மைத் திரைப்படம். இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் உலக அரசியலையே பேசியுள்ள அற்புதமான படம் தான் ஓபன்ஹெய்மர். நோலனின் முந்தைய படங்களான ‘மெமென்டோ’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டெர்ஸ்டெல்லார்’ எல்லாம் உங்களுக்கு பிடித்தால் இது நிச்சயம் உங்களை இம்ப்ரஸ் செய்யும். இந்த நூற்றாண்டின் சிறந்த திரைப்படம் ஓபன்ஹெய்மர் என பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய பால் ஸ்க்ரேடர் (Last temptation of Christ) தனது விமர்சனத்தை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். 

கதை: 1920-களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தனது மேற்படிப்பை தொடரும் இளம் வயது ஓப்பன்ஹைமர், தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஜீன் டேட்லாக் (ஃப்ளோரன்ஸ் பக்) உடனாக காதல், ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு எதிரான போரில் ஒப்பன்ஹைமரின் பங்கு என அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன.

சொந்த நாடு திரும்பும் அவர், அமெரிக்க அரசின் ‘புராஜெக்ட் மன்ஹாட்டான்’ என்ற ஒரு திட்டத்துக்காக அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் என்ற செவ்விந்தியர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனி நகரமே உருவாக்கப்படுகிறது. அங்குதான் உலகையே புரட்டிப் போடும் அந்த அணுகுண்டு(கண்டு)பிடிப்பை தனது சகாக்களுடன் நிகழ்த்துகிறார். தன் மீதான புகார்களை ஒப்பன்ஹைமர் உதறித் தள்ளினாரா என்பதை ஒரு சிறிய ட்விஸ்ட் உடன் சொல்லியிருக்கிறார் நோலன்.

படத்தின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் ஒரு காட்சி. ஹிரோஷிமா - நாகசாகி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன், ஒப்பன்ஹைமரை நேரில் பாராட்ட அழைக்கிறார். வெள்ளை மாளிகைக்குச் செல்லும் ஒப்பன்ஹைமர் அதிபரின் முகத்துக்கு நேரே, ‘மிஸ்டர் ப்ரெசிடென்ட், என் கைகளில் ரத்தக் கறை படிந்திருப்பதைப் போல உணர்கிறேன்’ என்று சொல்கிறார். இதுதான் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் கரு. இது வெறுமனே அணுகுண்டு வெடிப்பை அகலத்திரையில் பிரம்மாண்டமாக காட்டும் ஒரு திரைப்படமல்ல. மாறாக, அறிவியல் முன்னேற்றம், மனித அகங்காரம், நெறிப்பொறுப்பு மற்றும் மனச்சாட்சியின் போராட்டம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஒரு சிந்தனைத் திரைப்படமாகும். அரசியல் சுழலில் அலைகழிக்கப்பட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை. ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஒருவன், தனி மனிதனின் ஈகோவால் ஜீரோவாக கீழிறக்கப்படும் கதை.

ஓப்பன்ஹைமராக வாழ்ந்திருக்கும் சிலியன் மர்ஃபிக்கு இது வாழ்நாளுக்கான படம். இதுவரை வந்த நோலன் படங்களில் எந்தவொரு நடிகரும் (சிலியன் மர்ஃபி உட்பட) வழங்காத ஒரு அற்புதமான நடிப்பை இதில் வழங்கியுள்ளார். சிறந்த நடிகருக்கான பல விருதுகளை தட்டி தூக்கியிருக்கிறார்.  மேட் டேமன், ஃப்ளோரென்ஸ் பக், எமிலி ப்ளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட்ம் கேஸி அஃப்ளிக், கேரி ஓல்ட்மேன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வரலாறுப் பின்னணி குறித்து சிறிது தெரிந்துகொண்டு படம் பார்க்கச் செல்வது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் ஆழமான அறிவியல் வசனங்களையும், ஏராளமான கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

'இப்போது நான் உலகத்தை அழிக்கும் மரணமாக ஆகிவிட்டேன்’ என்ற கீதையின் மேற்கோள், ஐன்ஸ்டீனுக்கும் ஓப்பன்ஹைமருக்கும் இடையிலான நட்பு, அதனை படத்தில் காட்டிய விதம் சிறப்பு. லுட்விக் கோரன்ஸனின் பின்னணி இசை படத்துக்கும் பெரும் பலம். அணுகுண்டு சோதனையை காட்சியப்படுத்திய விதம் பிரம்மாண்டம்.

இந்த படம் முதலில் என்டர்டெயின்மென்ட்டுக்கான படமில்லை ஆகவே கமர்ஸ்ஷியல் தளபதி விஜய் - தல அஜித் ரசிகர்கள் தவிர்க்கவும். முதல் பாதி முழுக்க வசனங்களாகவும் கருப்பு வெள்ளை, கலர் என காட்சிகள் நகர்கின்றன. எந்த மசாலாவும் இல்லாமல் நல்ல கலைப்படைப்பை விரும்பும் ரசிகர்களுக்கான படமாக இதனை நோலன் கொடுத்துள்ளார்.

அணுகுண்டு எனும் அரக்கன்: பாம் பிளாஸ்ட் காட்சிகள் எல்லாம் படமாக்குவது AI உலகில் ஜுஜுபி மேட்டர். ஆனால், கிறிஸ்டோபர் நோலன் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். அதன் நிஜ வலியையும் நிஜ உணர்வையும் அப்படியே திரையில் படமாக கடத்தப் போகிறேன் என சிஜி காட்சிகளே பயன்படுத்தாமல் இந்த படத்தை இயக்கி உள்ளார். “மனிதன் எவ்வளவு சக்தி பெற்றாலும், அவன் இறைவன் அல்ல” என்ற அடிப்படை உண்மையை நமக்கு சொல்கிறார். “அறிவு பெருகும் போது பொறுப்பும் பெருக வேண்டும்” என்ற இறைவார்த்தையின் ஒளியில், இந்த திரைப்படம் கேட்கும் கேள்வி இதுதான்: மனித உயிரை அழிக்கக்கூடிய சக்தியை உருவாக்கும் உரிமை மனிதனுக்குண்டா? ஓப்பன்ஹைமரின் உள் குற்றவுணர்ச்சி, மனவேதனை, மற்றும் மௌனம், மனச்சாட்சியின் குரல் எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பங்குத் தளங்களில் உள்ள இளையோரை பார்க்கச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். 

அன்பும் நீதியும் இல்லாத அறிவியல், மனிதகுலத்தைக் காக்காது—அதை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும்.

Overall Rating:  8.5 / 10

Wednesday, October 1, 2025

LAL SINGH CHADHA (2022)

ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம். 

உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.

மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.


வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.

படத்தின் உயிரே அதன் அமீர்கான் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது. 

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்னவோ ஆங்கிலத்தின் Forrest Gump இன் Tom Hanks, Robin Wright கதாபாத்திரங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றார்கள்.  ஆங்கில படம் வசனங்கள் மனதை தொடும் அளவுக்கு இந்தியில் மற்றும் தமிழில் இல்லை. சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.

தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.

இந்தத் திரைப்படம் எளிமை, தூய்மை, நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற அன்பு ஆகியவை மனித வாழ்வை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குகின்றன என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது. அமீர் கதாபாத்திரம் அறிவிலும் உலகியலிலும் “பலவீனன்” என்று கருதப்பட்டாலும், அவன் இதயம் இயேசு பாராட்டும் குழந்தை மனப்பான்மையை உடையது. அவன் எந்தச் சூழலிலும் குறை கூறாமல், பழிவாங்காமல், கிடைத்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறான். உலகின் கணக்கில் பெரியதாய் தோன்றாத வாழ்க்கையிலும், உண்மையான அன்பு, விசுவாசம், நேர்மை ஆகியவற்றை வாழ்ந்தால், அந்த வாழ்க்கை இறைவனின் திட்டத்தில் ஆழமான அர்த்தம் பெறுகிறது.

Overall Rating:  7.2 / 10

COLD WAR (2018)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கும் கம்யூனிச நாடாக மாறிப் போயிருந்தது போலந்து. 

மேற்கு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா அனைத்தும் “சுதந்திர ஜனநாயக நாடுகள்” எனக் கருதப்பட்டாலும், கம்யூனிச ஆட்சிகள் அவற்றை எதிரி நாடுகளாக பார்த்தன. போலந்தில் நடப்பதும் கம்யூனிச ஆட்சி என்பதால் தாமாகவே அவை போலந்துக்கும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன. இந்த உலக நாடுகளில் அரசியல் சூழலுக்கு இடையில் ததும்பிப் பெருகிய ஒரு காதலின் கதைதான் Cold War (2018 film) 


போர்முடிந்த பிறகு நாயகனும் அவனது மேலாளரும் சேர்ந்து போலந்து நாட்டின் நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் வேலையை அரசு உதவியுடன் செய்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் இசையைக் கண்டுபிடித்து ஒரு இசைக்குழு உண்டாக்குவதுதான் நோக்கம். அப்படி தங்கள் இசைத் திறமையை வெளிக்காட்ட வந்திருப்பவர்களில் ஒருத்திதான் நாயகி. அவளைப் பார்த்த கணமே நாயகனுக்குப் பிடித்து விடுகிறது. கோடி முகங்களில் ஒரு முகம் மட்டும் உயிரின் வேரில் பூவை மலர்த்துமே அது போல முதல் பார்வை முதல் ஈர்ப்பு என இருவருக்கும் இடையில் காதல் தளும்பத் தொடங்குகிறது.

இசைக்குழுவினரை கம்யூனிச சித்தாந்தம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பாடல் பாடச் சொல்லி அரசாங்கம் அறிவுறுத்தும் போது நாயகன் எதிர்க்கிறான், மேலாளன் தனது தொழில் வளர்ச்சிக்காக ஒப்புக்கொள்கிறான். நாயகிக்கோ எப்படியாவது நாயகனோடு இந்த வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட வேண்டும். இசைக்குழுவை விட்டு நீங்கும் முடிவை நாயகன் எடுக்கிறான். 

ஒரு அரிய வாய்ப்பில் பெர்லினில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு நாயகனுடன் இந்த நாட்டை விட்டே ஓடிவரச் சம்மதிக்கிறாள். எங்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்றால் பிரான்ஸ்க்கு. போலந்து நாட்டின் எதிரி நாட்டுக்கு. ஆனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அவள் வரவில்லை, நாயகன் மனமுடைந்து அவன் மட்டுமே பிரான்ஸ்க்கு சென்றுவிடுகிறான். 

இருவரும் இருவேறு திசையில் வாழ நேர்கிறது. காலங்கள் ஓடுகின்றன, அவனுக்குச் சில காதலிகள் வாழ்வில் வருகிறார்கள். அவளுக்குச் சில காதலன்கள் வாழ்வில் வருகிறார்கள். ஆனாலும் அணையாத சுடராய் இந்தக் காதல் மட்டும் எப்போதும் எரிந்தபடியே இருக்கிறது. அவள் சிறந்த பாடகியாக மாறி இருக்கிறாள், அவன் ஓர் இசையமைப்பாளனாக மாறி இருக்கிறான்.

சிலகாலம் கழிந்து அவளைத் தேடிச் சென்று சந்தித்து காரணம் கேட்பான், நீ ஏன் என்று வராமல் போனாய்? "என்னால் உன்னோடு வரமுடியாமல் போனதுக்கு மன்னித்துக்கொள், ஒருவேளை அன்று நாம் சேர்ந்து ஓடிப் போயிருந்தால் இருவருமே தோற்று இருப்போம். வாழ்விலும் சரி. கனவிலும் சரி"

"என் இடம் வந்துவிட்டது இனி என்னைப் பின்தொடராதே" என்று சொல்லிவிட்டுச் சிறுது தூரம் சென்று அடக்கமாட்டாமல் திரும்ப ஓடிவந்து முத்தம் தருவாள். அதுதான் அவர்களின் காதலின் துவக்கமும், நிறைவும். வெட்ட வெட்டப் பல்லாயிரம் கிளைகளாகப் பெருகும் காதல் இது. 

நாயகி போலந்துக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும், நாயகனும் போலந்துக்கு செல்வான். ஆனால் போலந்தைப் பொறுத்தவரை இவன் எதிரிநாட்டுக்கு தப்பிச் சென்றவன், தேசதுரோகி. கைது செய்யப்படுகிறான்.  பதினைந்து வருட சிறை தண்டனை. நாயகிக்குத் தெரிந்து சிறைக்குத் தேடிவருவாள். 

நீ ஏன் இங்க வந்த? போ போயி யாராவது உனக்கு உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆண்மகனாக தேர்ந்தெடுத்து சந்தோசமா வாழு. என்பான். அவனை அழுத்தமாக முத்தமிட்டுச் சொல்வாள். "அப்படி ஒருத்தன் இன்னும் பிறக்கல. நான் உன்னை வெளியில் கொண்டுவருவேன் எப்படியாவது."

இதற்குப் பிறகான இறுதி பத்து நிமிடக் கதையைச் சொல்ல மாட்டேன். அதைக் காணுங்கள். மனதைக் கரைத்து நினைவில் அகலாது நின்றுவிடக் கூடிய ஒரு உன்னத காதல். 

“ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” (மாற் 8:36) என்ற வார்த்தைகள் இந்தக் கதையில் உயிர் பெறுகின்றன. விடுதலை மறுக்கப்படும் இடத்தில், மனித மரியாதை மிதிக்கப்படும் சூழலில், காதலும் நம்பிக்கையும் சுவாசிக்க முடியாது என்பதை நாயகன் விக்டர்–நாயகி ஸூலா உறவு நினைவூட்டுகிறது. “சமாதானம் செய்பவர்கள் பேறுபெற்றோர்” (மத் 5:9) என்ற நற்செய்தி அழைப்பின் ஒளியில், Cold War மனித இதயம் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேர்வு செய்யும் போது உறவுகள் உடைகின்றன என்றும், உண்மை, தியாகம், மன்னிப்பு ஆகியவை உள்ள இடத்தில்தான் உண்மையான ஒன்றியம் சாத்தியமென்றும் அமைதியாகச் சொல்கிறது.

படம் பாரத்து முடித்ததில் இருந்து மனம் முழுக்க ஒரு வெறுமையும், வெறுமை முழுக்க காதலும் நிரம்பியிருக்கிறது. (நன்றி: முக நூல் நண்பர்)

Overall Rating:  7.1 / 10

Tuesday, September 2, 2025

MUMU I HEAR YOU PAPA (2025)

2025 இல் ஒரு கொரியன் எமோஷனல் ட்ராமாவாக வெளிவந்த Mumu I hear you Papa. 

படத்தின் கதை. ஹீரோ ஒரு ஏசி மெக்கானிக். மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். இவருடைய வேலை, சம்பள குறைவு, இவற்றெல்லாம் காரணம் காட்டி இவர் விவாகரத்து செய்கிறார் மனைவி. இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தான் Mumu, என்னை கேட்டால் படத்தின் உடைய ஹீரோயின் கதாநாயகி. 


அந்த பொண்ணுதான் சொல்லப்போனா அந்த கதையின் நாயகி. நம்ம கதாநாயகனுக்கு இந்த உலகமே தன்னுடைய பொண்ணுதான். இந்த பொண்ணுக்கு உலகமே தன்னுடைய அப்பாதான். இதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் நம்ம கதாநாயகனுக்கு காது கேட்காது. அதனால அவர் எதை கம்யூனிகேட் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலும் அதை சைகையிலயேதான் வந்து அவர் கம்யூனிகேட் பண்ணுவாரு. கதாநாயகனுக்கு தன்னுடைய மகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அவன் மேலதான் உயிரே வச்சிருக்கேன். நம்ம கதாநாயகனுடைய மனைவி திருப்பி வருகிறாள். "என் மகளை தயவு செஞ்சு என்கிட்டயே கொடுத்துருங்க" அப்படின்னு லீகலாக அப்ரோச் பண்ண போக இதுக்கப்புறம் இந்த கதையில என்னதான் நடந்தது இதுதான் இந்த படத்துடைய மொத்த கதையே. 

இந்த படத்தை பட் நிச்சயமாக நீங்க பார்க்கும்போது உங்களுக்கு I am Sam (2001), Deiva Thirumagal (2013) கண்ணுக்குள்ள கன்பார்மா ஓடியே தீரும். 

இந்த படத்துடைய கதாநாயகனும் அட்டகாசமாக புல் ஆப் பண்ணி இருக்கிறார். அந்த குட்டி பொண்ணு நடிப்புதானா இல்ல உண்மையாவே அவருடைய சொந்த பொண்ணா அப்படிங்கிற அளவுக்கு எனக்கு ஒரு சந்தேகம். அந்த அளவுக்கு அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ் செம்மையாக புல் ஆஃப் பண்ணிருந்தது அந்த பொண்ணு. குறிப்பாக ஒரு ஃப்ளூட் எடுத்து அந்த பொண்ணு காது கேட்காத தன்னுடைய அப்பாவுக்கு வாசிச்சு காமிக்கிற ஒரு சீன் ஒன்னு இருக்கு நீங்க பாருங்க, யாரு பார்த்தாலும் கண்கள் எல்லாம் குளமாயிடும் நமக்கு. அந்த மாதிரி ஒரு காட்சி. .

இந்த படம் ஏற்கனவே வந்து ரெண்டு பேருமே பெஸ்ட் ஆக்டருக்கு வாங்கிட்டாங்க. இவர் ஹீரோ சிறந்த நடிகருக்கான விருது வாங்கிட்டாரு. அந்த குட்டி பொண்ணு சிறந்த குழந்தை நட்சத்திர அவார்டு வாங்கிருச்சு.

படத்துடைய பேக்ரவுண்ட் ஸ்கோரிங்கமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு எமோஷனல் சீக்குவன்ஸையும் பேக்ரவுண்ட் ஸ்கோரிங்ல உங்க புல் ஆஃப் பண்ண விதமே வேற அட்டகாசமாக பண்ணிருந்தாங்க. இதைத் தாண்டி மாற்றுத் திறனாளிகள் அவர்களுடைய செய்தியை சொல்ல அவர்கள் படும் கஸ்டம் - குறிப்பா, வாய் பேச முடியாத, இவங்க படுற கஷ்டம்ல்லாம் எவ்வளவுங்கிறது இந்த படத்தை பாருங்க. நிச்சயமாக ஒரு நல்ல ஃபீல இந்த படம் கொடுக்கும். மாற்றுத் திறனாளிகளின் துன்பங்களை விஷுவலா பேசுன ஒரு படம். 

Overall Rating:  7.5 / 10

Popular Posts