ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம்.
உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.
மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.
வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.
படத்தின் உயிரே அதன் அமீர்கான் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது.
கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்னவோ ஆங்கிலத்தின் Forrest Gump இன் Tom Hanks, Robin Wright கதாபாத்திரங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றார்கள். ஆங்கில படம் வசனங்கள் மனதை தொடும் அளவுக்கு இந்தியில் மற்றும் தமிழில் இல்லை. சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.
தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.
இந்தத் திரைப்படம் எளிமை, தூய்மை, நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற அன்பு ஆகியவை மனித வாழ்வை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குகின்றன என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது. அமீர் கதாபாத்திரம் அறிவிலும் உலகியலிலும் “பலவீனன்” என்று கருதப்பட்டாலும், அவன் இதயம் இயேசு பாராட்டும் குழந்தை மனப்பான்மையை உடையது. அவன் எந்தச் சூழலிலும் குறை கூறாமல், பழிவாங்காமல், கிடைத்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறான். உலகின் கணக்கில் பெரியதாய் தோன்றாத வாழ்க்கையிலும், உண்மையான அன்பு, விசுவாசம், நேர்மை ஆகியவற்றை வாழ்ந்தால், அந்த வாழ்க்கை இறைவனின் திட்டத்தில் ஆழமான அர்த்தம் பெறுகிறது.
No comments:
Post a Comment