இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கும் கம்யூனிச நாடாக மாறிப் போயிருந்தது போலந்து.
மேற்கு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா அனைத்தும் “சுதந்திர ஜனநாயக நாடுகள்” எனக் கருதப்பட்டாலும், கம்யூனிச ஆட்சிகள் அவற்றை எதிரி நாடுகளாக பார்த்தன. போலந்தில் நடப்பதும் கம்யூனிச ஆட்சி என்பதால் தாமாகவே அவை போலந்துக்கும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன. இந்த உலக நாடுகளில் அரசியல் சூழலுக்கு இடையில் ததும்பிப் பெருகிய ஒரு காதலின் கதைதான் Cold War (2018 film)
போர்முடிந்த பிறகு நாயகனும் அவனது மேலாளரும் சேர்ந்து போலந்து நாட்டின் நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் வேலையை அரசு உதவியுடன் செய்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் இசையைக் கண்டுபிடித்து ஒரு இசைக்குழு உண்டாக்குவதுதான் நோக்கம். அப்படி தங்கள் இசைத் திறமையை வெளிக்காட்ட வந்திருப்பவர்களில் ஒருத்திதான் நாயகி. அவளைப் பார்த்த கணமே நாயகனுக்குப் பிடித்து விடுகிறது. கோடி முகங்களில் ஒரு முகம் மட்டும் உயிரின் வேரில் பூவை மலர்த்துமே அது போல முதல் பார்வை முதல் ஈர்ப்பு என இருவருக்கும் இடையில் காதல் தளும்பத் தொடங்குகிறது.
இசைக்குழுவினரை கம்யூனிச சித்தாந்தம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பாடல் பாடச் சொல்லி அரசாங்கம் அறிவுறுத்தும் போது நாயகன் எதிர்க்கிறான், மேலாளன் தனது தொழில் வளர்ச்சிக்காக ஒப்புக்கொள்கிறான். நாயகிக்கோ எப்படியாவது நாயகனோடு இந்த வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட வேண்டும். இசைக்குழுவை விட்டு நீங்கும் முடிவை நாயகன் எடுக்கிறான்.
சொன்னாற்போல அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படிந்து இயங்கியதால் பெருவாரியான அனுகூலங்களைப் பெற்று இசைக்குழு வளர்ச்சியடைந்து பல்வேறுநாடுகளுக்குப் பயணம் செய்ய வாய்க்கிறது. அப்படியொரு வாய்ப்பில் பெர்லினில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு நாயகனுடன் இந்த நாட்டை விட்டே ஓடிவரச் சம்மதிக்கிறாள். எங்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்றால் பிரான்ஸ்க்கு. போலந்து நாட்டின் எதிரி நாட்டுக்கு.
ஆனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அவள் வரவில்லை, நாயகன் மனமுடைந்து அவன் மட்டுமே பிரான்ஸ்க்கு சென்றுவிடுகிறான்.
இருவரும் இருவேறு திசையில் வாழ நேர்கிறது. காலங்கள் ஓடுகின்றன, அவனுக்குச் சில காதலிகள் வாழ்வில் வருகிறார்கள். அவளுக்குச் சில காதலன்கள் வாழ்வில் வருகிறார்கள். ஆனாலும் அணையாத சுடராய் இந்தக் காதல் மட்டும் தப்தப் என திரிவெடிக்க உள்ளுக்குள் எரிந்தபடியே இருக்கிறது. அவள் சிறந்த பாடகியாக மாறி இருக்கிறாள், அவன் ஓர் இசையமைப்பாளனாக மாறி இருக்கிறான்
சிலகாலம் கழிந்து அவளைத் தேடிச் சென்று சந்தித்து காரணம் கேட்பான், நீ ஏன் என்று வராமல் போனாய்?
"என்னால் உன்னோடு வரமுடியாமல் போனதுக்கு மன்னித்துக்கொள், ஒருவேளை அன்று நாம் சேர்ந்து ஓடிப் போயிருந்தால் இருவருமே தோற்று இருப்போம். வாழ்விலும் சரி. கனவிலும் சரி"
என் இடம் வந்துவிட்டது இனி என்னைப் பின்தொடராதே என்று சொல்லிவிட்டுச் சிறுது தூரம் சென்று அடக்கமாட்டாமல் திரும்ப ஓடிவந்து முத்தம் தருவாள். அதுதான் அவர்கள் காதல், அவர்களால் விலகி இருக்கமுடியாது, நண்பர்கள் போலப் பழகிக்கொள்ள முடியாது, நிறைந்து இருப்பதெல்லாம் காதலின் தீவிரமும் நீ எனது நான் உனது எனும் வேட்கையும்தான்.
உலகநாடுகளின் அரசியல் சூழலால் அவர்கள் எப்போதாவது ஏதாவதொரு நாட்டில்தான் சந்தித்துக்கொள்ள முடியும். ஒருவருடத்திற்கு ஒரு முறை, இரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்று தவணைமுறையில்தான் இந்தக் காதலை ஸ்பரிசிக்கமுடியும், அது தாளமாட்டாத ஆனந்தத்தைத் தருவது போலவே தாளமாட்டாத துயரையும் தருகிறது. பிரிவன் வாதையை எதிர்கொள்ள முடியாமல். எப்படியாவது இந்தக் காதலை நிர்மூலமாக்கினால் தேவலாம் என்று தோன்றும். நீ அறிமுகம் செய்துவைத்த பணக்கார திரைப்படத் தயாரிப்பாளரோடு நான் ஓர் இரவில் ஆறு முறை புணர்ந்தேன். அவன் உன்னைப் போல அல்ல, எல்லாவற்றிலும் சிறந்தவன் என்று நாயகனைச் சீண்டுவாள். போகட்டும் இந்தக் காதல் இப்படியாவது அழியட்டும்.
வெட்ட வெட்டப் பல்லாயிரம் கிளைகளாகப் பெருகும் காதல் இது.
நாயகி போலந்துக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும், நாயகனும் போலந்துக்கு செல்வான். ஆனால் போலந்தைப் பொறுத்தவரை இவன் எதிரிநாட்டுக்கு தப்பிச் சென்றவன், தேசதுரோகி. கைது செய்யப்படுகிறான். பதினைந்து வருட சிறை தண்டனை. நாயகிக்குத் தெரிந்து சிறைக்குத் தேடிவருவாள்.
நீ ஏன் இங்க வந்த? போ போயி யாராவது உனக்கு உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆண்மகனாக தேர்ந்தெடுத்து சந்தோசமா வாழு. என்பான். அவனை அழுத்தமாக முத்தமிட்டுச் சொல்வாள். "அப்படி ஒருத்தன் இன்னும் பிறக்கல. நான் உன்னை வெளியில் கொண்டுவருவேன் எப்படியாவது."
இதற்குப் பிறகான இறுதி பத்து நிமிடக் கதையைச் சொல்ல மாட்டேன். அதைக் காணுங்கள். மனதைக் கரைத்து நினைவில் அகலாது நின்றுவிடக் கூடிய ஒரு காதல்.
உக்கிரமான ஒரு காதலால் இந்தப் பூமியில் நிலைத்து வாழமுடியாது. ஆத்மார்த்தமாக அது அழிந்து போகவேண்டும். “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” (மாற்கு 8:36) என்ற வார்த்தைகள் இந்தக் கதையில் உயிர் பெறுகின்றன. விடுதலை மறுக்கப்படும் இடத்தில், மனித மரியாதை மிதிக்கப்படும் சூழலில், காதலும் நம்பிக்கையும் சுவாசிக்க முடியாது என்பதை நாயகன் விக்டர்–நாயகி ஸூலா உறவு நினைவூட்டுகிறது. “சமாதானம் செய்பவர்கள் பேறுபெற்றோர்” (மத்தேயு 5:9) என்ற நற்செய்தி அழைப்பின் ஒளியில், Cold War மனித இதயம் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேர்வு செய்யும் போது உறவுகள் உடைகின்றன என்றும், உண்மை, தியாகம், மன்னிப்பு ஆகியவை உள்ள இடத்தில்தான் உண்மையான ஒன்றியம் சாத்தியமென்றும் அமைதியாகச் சொல்கிறது.
படம் பாரத்து முடித்ததில் இருந்து மனம் முழுக்க ஒரு வெறுமையும், வெறுமை முழுக்க காதலும் நிரம்பியிருக்கிறது.
(நன்றி: முக நூல் நண்பர்)

No comments:
Post a Comment