Sunday, January 18, 2026

கடவுளின் செம்மறி! - பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

ஞாயிறு, 18 ஜனவரி ’26

எசாயா 49:3, 5-6. 1 கொரிந்தியர் 1:1-3. யோவான் 1:29-34

ரீசண்டா என்னோட பிரண்டோட சின்ன பொண்ணு சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. அது கிளாஸ்ல சொன்ன அந்த முயல்-ஆமை ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டது. முயல் வேகமாக ஓடி பின்பு தூங்க ஆரம்பித்து விட்டது. ஆனால் ஆமையோ மெதுவாக, பொறுமையாக ஓடி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. வகுப்பில் இருந்து அனைத்து குழந்தைகளும் கைதட்டி ஆமையை ஆதரித்தனர். ஆனால் அந்த பாப்பா சொன்ன கேள்வி சொன்ன பதில்: பந்தயத்தில் இரண்டாவது வந்த முயலுமே சந்தோஷமா தானே இருந்திருக்கணும்! காரணம், அது ஓடிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு மரத்தை பார்த்திருந்தால் மரத்தில் விளையாடி வந்திருக்கலாம். நண்பர்களோடு பேசி ஆடி பாடி மகிழ்ந்திருக்கலாம். ஆக பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்த முயலுமே மகிழ்ந்து தான் இருந்திருக்க வேண்டும். 

ஆம்! வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம் கிடையாது. அது நம்மை நாமே அறிந்து கொள்ளக்கூடிய பயணம். சிலர் வேகமாக - சிலர் மெதுவாக ஓடுவார்கள். அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப ஓடுவார்கள். ஆனால் இறுதியாக இறைவன் கேட்கும் கேள்வி: "நீங்கள் மகிழ்ச்சியாக பயணித்தீர்களா உங்களை ஏற்றுக் கொண்டு, அறிந்து கொண்டு பயணித்தீர்களா? இதையே இன்றைய வாசகங்கள் நமக்குக் கேள்வியாக விடுக்கின்றன. 

கிறிஸ்து பிறப்பு விழாவை தொடரும் மூன்று ஞாயிறுகளும் "வெளிப்பாடு ஞாயிறு" என அழைக்கப்படுகின்றன இயேசு புறவினத்தாரின் ஒளியாக தன்னையே வெளிப்படுத்திய விழாவை திருக்காட்சி திருவிழா என்றும், கடவுள் தன் மகனை இந்த உலகிற்கு அன்பார்ந்த மகன் என வெளிப்படுத்திய விழாவை திருமுழுக்கு ஞாயிறு என்றும், யோவான் மெசியாவை கடவுளின் ஆட்டுக்குட்டி என்று இந்த உலகிற்கு வெளிப்படுத்திய நாளை இன்றும் கொண்டாடுகின்றோம். 

இன்று மூன்று வாசகங்களும் நம்முடைய அழைப்பைப் பற்றி சிந்திக்க விடுகின்றன.  நீ அழைக்கப்பட்டவன் என எசாயா இறைவாக்கினரும், நீ தேர்ந்து கொள்ளப்பட்டவன் என பவுல் அடிகளாரும், நீ அனுப்பப்பட்டவன் என யோவான் நற்செய்தியாளரும் நம்மை அழைக்கின்றனர். ஆக வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல! மாறாக பயணம். எந்த ஒரு விமர்சனமும் கூடாது! சிலர் தோற்றத்தை பார்த்து நம்மை விமர்சிப்பார்கள். ஆமையினுடைய ஓடுகளை பார்த்து, முயலின் திறமை பார்த்து விமர்சிப்பார்கள். ஆனால் ஆமை தன்னை புகழவில்லை, முயலை மட்டப்படுத்தவில்லை. தன்னை அறிந்து கொண்டது. ஆக திறமை மட்டும் போதாது அழைப்பை உணர்ந்த வாழ்க்கை வாழவேண்டும். 

இன்றைய நற்செய்தியில் மெசியாவுக்கென்று ஒரு உயரிய அழைத்தல் இருந்து. அதைப் போன்று மெசியாவின் முன்னோடிக்கு என்று ஒரு அழைத்தல் இருக்கின்றது. அழைத்தலை மற்றொரு அழைத்தலோடு ஒப்பிடக்கூடாது. Winning is not same for everyone. நான் மெசியா அல்ல! நான் முயலை போன்றவன் அல்ல. ஆனால் நான் அழைக்கப்பட்டவன், தெரிந்து கொள்ளப்பட்டவன், எனக்கென்று ஒரு பணி உள்ளது. 

யோவான் நற்செய்தியாளர் இயேசுவை ஆட்டுக்குட்டியென நமக்கு வெளிப்படுத்துகிறார் ‘செம்மறி’ அல்லது ‘ஆட்டுக்குட்டி’ என்னும் சொல்லை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:

(அ) பாஸ்கா ஆட்டுக்குட்டி – இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறுமுன் பாஸ்கா கொண்டாடுகிறார்கள். ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அதன் இரத்தத்தால் தங்கள் வீட்டு நிலைகளில் குறியிடுகிறார்கள் (காண். விப 12). பாஸ்கா கொண்டாட்டம் அவர்களுடைய விடுதலையின் அடையாளமாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுவும் பாஸ்கா ஆடு போல பலியாகி நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தருகிறார். மேலும், எருசலேம் ஆலயத்தில் பாஸ்கா ஆடு பலியிடப்படும் நேரத்தில் இயேசு சிலுவையில் இறப்பதாகப் பதிவு செய்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

(ஆ) பாவக் கழுவாய் ஆடுகள் – இஸ்ரயேல் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாவக் கழுவாய் (எபிரேயத்தில் ‘யோம் கிப்பூர்’) நாளைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் (காண். லேவி 16). இந்த நாளில்தான் தலைமைக்குரு திருத்தூயகத்துக்குள் நுழைவார். அவர் தம் பாவத்துக்காக கன்றுக்குட்டி ஒன்றை ஒப்புக்கொடுப்பார். பின் இரண்டு செம்மறி ஆடுகள் அவர்முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்படும். அவற்றில் ஒன்றை மக்களின் பாவங்களுக்காகப் பலியிடுவார் குரு. மற்றொரு ஆடு ஊரின் நடுவே அனுப்பப்படும். அந்த ஆட்டின்மேல் மக்கள் தங்கள் பாவங்களைச் சுமத்துவார்கள். அதன் முடியைப் பிடுங்க, அடிக்க, அதன்மேல் எச்சில் உமிழ என்று அந்த ஆடு அனைத்து அவமானங்களையும் சுமந்துகொண்டு பாலைநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே இறந்து போகும். இயேசு இவ்விரண்டு ஆடுகளையும் அடையாளப்படுத்துகிறார். மக்களின் பாவங்களுக்காகப் பலியாகிறார். சிலுவையைச் சுமந்துகொண்டு ஊருக்கு வெளியே செல்கிறார்.

(இ) நல்லாயன் – தம்மை ‘நல் ஆயன்’ என்று அடையாளப்படுத்துகிற இயேசு, ‘நல் ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கையளிக்கிறார்’ என்கிறார் (காண். யோவா 10:11).

‘உலகின் பாவத்தைப் போக்குபவர்’ என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். ஆனால், திருப்பலியில், ‘உலகின் பாவங்களைப் போக்குபவர்’ என்று சொல்கிறோம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? யோவான் நற்செய்தியில் ‘பாவம்’ என்பது ‘மானிட நிலை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தூரம். அலகை செயல்படும் இடம்.’ இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயேசு. ‘பாவங்கள்’ என்று சொல்லும்போது நம் தனிப்பட்ட பாவங்களை மன்னிக்கிறவராக, அவற்றை நீக்குபவராக இருக்கிறார் இயேசு. ‘பாவங்களிலிருந்து’ விடுபட அல்ல, ‘பாவத்திலிருந்து’ விடுபடவே நாம் முயற்சி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts