திங்கள், 5 ஜனவரி 2026
1 யோவா 3:22-4:6. மத் 4:12-17, 23-25
வாழ்க்கையில் நாம் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம்; அதற்காகவே comfort zone–இல் தங்கிக்கொள்கிறோம். ஆனால் போர்க்களத்திற்குள் இறங்காமல், வெற்றியை அடைய முடியாது. ஆபத்துகளை ஏற்காமல், சவால்களை எதிர்கொள்ளாமல், வாழ்க்கையில் முன்னேற இயலாது.
இன்றைய நற்செய்தியில், முப்பது ஆண்டுகளாக மறைந்த வாழ்க்கை வாழ்ந்த இயேசு, நாசரேத்து என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுகிறார். அவர் கப்பர்நாகும் சென்று அங்கே குடியிருக்கிறார்; அங்கே போதிக்கிறார்; அங்கேயே வல்ல செயல்களையும் செய்கிறார். அதே நேரத்தில், அங்கே எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் அந்த எதிர்ப்புகள் இயேசுவை நிறுத்தவில்லை; மாறாக, அவரது பணியை இன்னும் வெளிப்படையாக மாற்றின.
2026 ஆம் ஆண்டு துவங்கி 1 வாரமே ஆகிறது. நாம் எடுத்தது மோடிவேசன், motivation alone cannot bring success. அது தீப்பொறி போல—ஒரு கணம் எரியும், பின்னர் மங்கும். நம்மை முன்னே கொண்டு செல்பவை, நம்முடைய தீர்மானம், தைரியம், தொடர்ச்சியான முயற்சி, திட்டமிடல் ஆகியவையே.
அதற்கு முக்கியமான தடைகள் இரண்டு: ஒன்று நம் சோம்பல்; மற்றொன்று பிறரின் விமர்சனம். இவற்றிற்கு இடம் கொடுத்தால், நம் அழைப்பையும் நம் பணியையும் நாமே நிறுத்திவிடுவோம். இயேசு அதைப் போலச் செய்யவில்லை. அவர் சொன்னார்: “மனம் மாறுங்கள்; விண்ணரசு அண்மையில் வந்துள்ளது.” இந்த அழைப்பு முதலில் நமக்கே.
இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்: பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுங்கள்; பயத்தை விடுங்கள்; விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். கடவுள் அழைக்கும் இடத்திற்குச் சென்று, அவர் கொடுத்த பணியை தைரியமாகச் செய்யுங்கள். அப்பொழுதே நம் வாழ்க்கையும் பிறருக்கு நற்செய்தியாக மாறும்.
No comments:
Post a Comment