ஞாயிறு, 10 மே 2026 - திப 8:5-8,14-17. 1 பேது 3:15-18. யோவா 14:15-21
வெகுவிரைவில் நம் திருஅவையில் இரண்டு முக்கியமான பெருவிழாக்களை நாம் கொண்டாட இருக்கிறோம்: Feast of the Ascension - இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா மற்றும் Pentecost- தூயஆவியாரின் பெருவிழா. இன்றைய வாசகங்கள் இந்த இரு பெருவிழாக்களையும் அர்த்தமுள்ள முறையில் கொண்டாட நம்மைத் தயாரிக்கின்றன.
இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான காலம். பல பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாராட்டப்படுகிறார்கள். சில சமயங்களில் "கடைசி பெஞ்சில் இருக்குமானவர்கள் எப்பவுமே மக்காக இருப்பர் என்ற எண்ணம் ஆசிரியர்களின் கம்பளைண்ட் மட்டுமல்ல, சமுதாயத்தில் இருக்கிறது". ஆனால் அது எப்போதும் உண்மையல்ல. முதல் மதிப்பெண் பெறுவதும், வாழ்க்கையில் உயர்வதும் கடின உழைப்பாலும், இறைவனின் அருளாலும் தான் நிகழ்கிறது.
இன்றைய முதல் வாசகம் கடைஇனத்தவர் என்று கருதப்பட்ட “சமாரியர்களின் பெந்தகோஸ்து” என்று அழைக்கப்படுகிறது. யூதர்களால் தாழ்த்தப்பட்டவர்களாகவும், அந்நியர்களாகவும் கருதப்பட்ட சமாரியர்கள்மீதும் தூய ஆவியானவர் இறங்குகிறார். இதன் மூலம் கடவுளின் அருள் சிலருக்கே சொந்தமானது அல்ல; அனைவருக்குமானது என்பதை திருவிவிலியம் வெளிப்படுத்துகிறது.
திருவிவிலியத்தில் தூயஆவியாரின் வருகை மூன்று முக்கியக் குழுக்களிடம் நிகழ்வதை பார்க்கிறோம்: யூதர்கள், சமாரியர்கள் மற்றும் புறவினத்தார். இன்றைய முதல் வாசகத்தில், பிலிப்பு சமாரியாவுக்கு அனுப்பப்படுகிறார். கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் திருத்தூதர் அல்ல; திருத்தொண்டர். ஆனால் அவர் இறைவார்த்தையை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் நோய்களையும் குணமாக்குகிறார். அதாவது, நற்செய்தி அறிவித்தலும், நலம் தருதலும் இணைந்து செல்கின்றன.
ஒருகாலத்தில் சமாரியர்களும் யூதர்களே. ஆனால் அசிரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியபின் கலப்பினத் திருமணங்கள் ஏற்பட்டதால், யூதர்கள் அவர்களை “தூய்மையை இழந்தவர்கள்” என்று கருதி சமயத்திலும் சமூகத்திலும் ஒதுக்கினர். அதனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதை திருத்தூதர்கள் மேற்கொண்டாலும், சமாரியர்களிடம் பிலிப்பு (திருத்தொண்டர், தூதர் அல்ல!) அனுப்பப்படுகிறார். ஒருவேளை இந்த திருத்தொண்டருடைய பணி ஒரு தோல்வியாக மாறும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் கடவுள் அங்கே செயல்படுகிறார். கடவுளுடைய வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமாரியர்கள் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்கிறார்கள். திருத்தூதர்கள் பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்புகிறார்கள். அவர்கள் கைகளை வைத்து செபிக்கும்போது தூய ஆவியார் அவர்கள்மேல் இறங்குகிறார்.இதன் மூலம் ஒரு பெரிய மாற்றம் நிகழ்கிறது. “தூய ஆவியார் யூதர்களுக்கே” என்ற எண்ணம் உடைக்கப்படுகிறது. தூய ஆவியார் அனைவருக்குமான கொடை. யாரையும் ஒதுக்கவோ, தடுக்கவோ நமக்கு அதிகாரமில்லை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.
இரண்டாம் வாசகம் தொடக்க திருச்சபையில் இருந்த துன்புறுத்தல்களை (persecution) நினைவுபடுத்துகிறது. ஆனால் அந்த சூழலிலும், “பணிவோடும், மரியாதையோடும், பொறுமையோடும்” வாழ அழைக்கிறது. “நன்மை செய்து துன்புறுவது மேல்” என்று பேதுரு எடுத்துரைக்கிறார்.
இன்றைய சமூகத்திலும் இதை நாம் பார்க்கிறோம். கருத்து வேறுபாடுகள் காரணமாக மக்கள் ஒருவரை ஒருவர் இழிவாக நடத்துகிறார்கள். எ.கா: தேர்தல் முடிவுகள் நேரத்தில் பார்க்கிறோம். மரியாதை குறைவாக நடத்துவது, பழிப்பது. கருத்து வேறுபாடுகள் என்பது வேறு, மரியாதை என்பது வேறு, அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஒரு கட்சியை ஆதரிக்கிறோம், ஆனால் மற்றவர்களை மரியாதையோடு நடத்தவேண்டும். கிறிஸ்தவர்களின் அடையாளம் மரியாதை, பொறுமை, கனிவு ஆகியவையாக இருக்க வேண்டும்.
நற்செய்தி வாசகமான யோவான் 14:15-21, விண்ணேற்றமும் பெந்தகோஸ்தும் நோக்கி நம்மை வழிநடத்துகிறது. “நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்று இயேசு கூறுகிறார். அதாவது, “நான் உங்களை அனாதைகளாக விடமாட்டேன்” என்று உறுதியளிக்கிறார். இங்கே இயேசு தந்தை, தாம், மற்றும் தூயஆவியார் என மூவொரு இறைவனைப் பற்றிய ஒரு ஆழமான வெளிப்பாடாகும்.
இயேசு தூயஆவியாரை “உண்மையை வெளிப்படுத்தும் ஆவி” என்று அழைக்கிறார். சில நேரங்களில் நமக்கு உண்மை மறைக்கப்படுகிறது. எது சரி, எது தவறு என்று புரியாமல் போகிறது. அப்போது தூயஆவியார் உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறார். ஆனால் உலகம் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயேசு சொல்கிறார். ஏனெனில் உலகம் பல நேரங்களில் இருளிலும் பாவத்திலும் வாழ்கிறது. இருள் நிறைந்த இடத்தில் ஒளி நிலைக்க முடியாததுபோல, பாவம் நிறைந்த மனதில் தூயஆவியாரின் செயல் தடைபடுகிறது.
“துணையாளர்” என்பதற்காக பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் Paracletos. இதன் பொருள்: உடனிருந்து வழிநடத்துபவர், ஆறுதல் தருபவர், பாதுகாப்பவர், நலம் தருபவர்.
நற்செய்தியின் மையக்கருத்தை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம். குட்டியானையாக இருக்கும்போது ஒரு சிறிய சங்கிலியில் கட்டப்பட்ட யானை, பெரியதாக வளர்ந்த பிறகும் அந்த சங்கிலியை உடைக்க முயற்சிக்காது. ஏன்? “இதிலிருந்து நான் வெளியே வர முடியாது” என்ற எண்ணம் அதன் மனதில் பதிந்துவிடுகிறது. இதையே “Self-limiting belief” என்று கூறுகிறார்கள்.
அதேபோல திருத்தூதர்களும் ஆரம்பத்தில் “தூயஆவியார் யூதர்களுக்கே” என்று நினைத்தனர். ஆனால் கடவுள் அந்த வரம்புகளை உடைத்தார். சமாரியர்கள்மீதும் தூயஆவியார் இறங்கினார். இதுவே திருச்சபையின் புதிய விழிப்புணர்வு.
நம்முடைய வாழ்க்கையிலும் பல வரையறைகள் இருக்கின்றன: சாதி, குடும்பப் பின்னணி, மொழி, சமூக நிலை போன்றவை. இவற்றைத் தாண்டி வெளியே வர அழைக்கப்படுகிறோம். மூன்று எளிய சிந்தனைகள்
- மனிதர்களை பிரிக்கும் எல்லைகளை உடைப்போம்.
- பணிவையும் கனிவையும் பிறருக்கு தருவோம்.
- நம் வாழ்க்கையின் திசையை காட்டும் தூயஆவியாரின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்வோம்.
அப்போது நாம் இந்த உலகில் வாழும்போதே உள்ளார்ந்த உயிர்ப்பைப் பெற்றவர்களாக வாழ முடியும்.
ஒருமுறை ஒரு ஆயர் குழந்தைகளுக்கான திருப்பலிக்குப் பிறகு சிறிய மறைக்கல்வி நிகழ்ச்சி நடத்தினார். அவர் ஒரு ஆப்பிளை கையில் பிடித்துக் கொண்டு கேட்டார்: “கடவுள் எங்கே இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆப்பிளை உனக்குக் கொடுப்பேன்.”
ஒரு சிறுமி சிரித்துக்கொண்டு சொன்னாள்: “ஆயரே, கடவுள் இல்லாத இடம் எங்கே என்று நீங்கள் சொல்லுங்கள்; நான் உங்களுக்கு இரண்டு ஆப்பிள் தருகிறேன்!”
இதுதான் ஞானம். தூயஆவியாரின் ஏழு கொடைகளில் ஒன்று ஞானம். ஞானம் என்பது அதிக புத்தகங்கள் படிப்பது மட்டும் அல்ல. கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை உணர்ந்து, நல்லதைத் தேர்ந்தெடுத்து வாழும் மனமே உண்மையான ஞானம். “கடவுள்பயம் — அதுவே ஞானத்தின் தொடக்கம்.”
அன்பானவர்களே, தூயஆவியானவர் நாம் சம்பாதிக்கும் ஒன்றல்ல. அவர் கடவுள் இலவசமாக அளிக்கும் அருட்கொடை. பெந்தகோஸ்து பெருவிழாவை எதிர்நோக்கி வாழும் இந்த நாட்களில், இன்றைய வாசகம் ஒரு வரலாற்று நிகழ்வை மட்டும் நினைவூட்டவில்லை; அது நம்முடைய வாழ்விலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒரு ஆன்மிக அனுபவமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment