Saturday, March 28, 2026

குருத்தோலை மட்டும் ஏந்தாதீர்கள்; சிலுவையையும் ஏந்துங்கள் - குருத்து ஓலை ஞாயிறு

மத்தேயு 21:1-11. எசா 50:4-7. பிலி 2:6-11.

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் கொண்டாடும் குருத்து ஓலை ஞாயிறு (Palm Sunday) ஒரு நிகழ்வு மட்டும் அல்ல; அது புனித வார வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம். சென்ற ஆண்டும் இதே நாளில் குருத்தோலை ஏந்தி வந்தோம். பின்னர் அந்த ஓலைகள் சாம்பலாகி நெற்றியில் பூசப்பட்டு, 40 நாள் தவப்பயணத்தை மேற்கொண்டோம். இன்று மீண்டும் புதிய குருத்தோலைகளை ஏந்துகிறோம். இதுவே கிறிஸ்தவ வாழ்க்கை: மகிழ்ச்சியிலிருந்து சோதனை, சோதனையிலிருந்து தியாகம், தியாகத்திலிருந்து உயிர்ப்பு.

இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் பதிவு செய்கிறார்கள். எனினும், ஒத்தமைவு (சினாப்டிக்) நற்செய்திகளோடு ஒப்பிடும்போது, மத்தேயு நற்செய்தியாளர் சில ஆழமான உண்மைகளை வலியுறுத்துகிறார்:

  1. இயேசு ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் கொண்டு நுழைகிறார் (மற்ற நற்செய்திகளில் குட்டிக் கழுதை மட்டும் குறிப்பிடப்படுகிறது). இதன் பொருள்: “இயேசு ஒருவராக இல்லை”; தந்தை அவரோடு இருக்கிறார். மத்தேயுவைப் பொருத்தவரை, அவர் “இமானுவேல்” – கடவுள் நம்மோடு. இது இயேசுவுக்கான உண்மை மட்டும் அல்ல; துன்பத்தில் இருக்கும் மனிதனோடு, அநீதியில் வாடும் மக்களோடு, தனிமையில் அழும் உள்ளங்களோடு கடவுள் பயணிக்கிறார்.
  2. இறைவாக்கினர் “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்.” இதுவரை இஸ்ராயேல் மக்களிடம் வந்தவர்கள்—அசீரியர்களும் பாபிலோனியர்களும்—குதிரைகளில் வந்தார்கள். அவர்கள் இரத்தத்தையும், அழுகையையும், கண்ணீரையும் கொண்டு வந்தார்கள். ஆனால் இயேசு அமைதியை கொண்டு வருகிறார்.
  3. “இவர் யார்?” என்ற கேள்வியை மத்தேயு எழுப்புகிறார். “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று மக்கள் முழங்குகிறார்கள். மத்தேயு நற்செய்தியின் வாசகர் ஒவ்வொருவரும் “இவர் யார்?” என்ற கேள்வியைத் தமக்குள் எழுப்ப வேண்டும்.

ஆண்டவராகிய இயேசு நம் வாழ்க்கை என்னும் எருசலேமிற்குள் நுழைகிறார். இமானுவேலராக நம்மோடு நிற்கிறார். அமைதியை நமக்கு தருகிறார். இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் “இவர் யார்?” என்ற கேள்விக்கான பதிலை நம் இதயத்தின் அமைதியில் அளிக்க வேண்டும்.

நம் காலத்தின் சிலுவை – போர். அன்பானவர்களே, இன்று உலகம் முழுவதும் நாம் சந்திக்கும் ஒரு பெரிய உண்மை: போர்.

Strait of Hormuz ஏறக்குறைய மூடப்பட்ட நிலையில் உள்ளது. அதன் விளைவாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார சிக்கல், நாடுகளுக்கிடையே அச்சம் ஆகியவை உருவாகின்றன.

சாதாரண மனிதர்கள் பாடுபட்டு கட்டிய வீடுகளும், பேணி வளர்த்த பிள்ளைகளும்—எங்கிருந்தோ விழும் குண்டுகளால் சில நொடிகளில் அழிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் கேட்கிறான்: “கடவுள் எங்கே?”

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய உலகின் முக்கிய மதங்களின் பிறப்பிடமாக மத்திய கிழக்கு பகுதி இருக்கிறது. பண்டைய நாகரிகங்களிலும் (பாபிலோனியா, எகிப்து) பல கடவுள் நம்பிக்கைகள் இருந்தன. ஆனால் இன்று கேள்வி:

எந்தக் கடவுளிடம் நாம் செபிப்பது? எந்தக் கடவுள் இந்தப் போரை நிறுத்துவார்?

  • ஒரு மனிதன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சாக்கடையில் விழுந்துவிடுகிறான். முதல் இருவர் உதவ முயல்கிறார்கள்; ஆனால் தூரத்தில் இருந்து (கம்பு மற்றும் கயிற்றின் உதவி கொண்டு). ஆனால் முடியவில்லை.
  • மூன்றாவது ஒருவர் தாமதிக்காமல் உள்ளே குதித்து, தனது தோள்களில் அவனைச் சுமந்து காப்பாற்றுகிறார்.
  • அவரே இயேசு!.

மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் (இதிகாசங்கள்/நீதி நூல்கள்); ஆனால் இயேசு உள்ளே இறங்கி காப்பாற்றுகிறார்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மாயையில் வாழும் இஸ்ரேல் மக்கள், தங்கள் மதமே உயர்ந்தது என்று கூறும் இஸ்லாம் மதம், கடவுளின் பெயரால் பழிவாங்கத் துடிக்கும் குழுக்கள்—யாரும் இதுவரை போரை நிறுத்தவில்லை.

ஆனால் இயேசு இந்த வார நிகழ்வுகளில் அவரை கொல்ல திட்டமிடுவார்கள் - அவரை தீர்ப்பிடுவார்கள் - அவரை இகழ்வார்கள். ஆனால் அவர் எதிர்த்து போராடவில்லை; போர்க்கொடி தூக்கவில்லை. எசாயா 50:4–7ல் கூறும் துன்புறும் ஊழியனைப் போல: அடிப்போருக்கு முதுகை கொடுத்தார் - இகழ்ச்சியைத் தாங்கினார் - முகத்தை மறைக்கவில்லை - இயேசு சிலுவையைச் சுமக்கிறார்.

  • கடவுள் இந்தப் போரைக் கண்டும் காணாதவரல்ல. அவர் சிலுவையில் இருக்கிறார்.
  • காயமடைந்தவர்களுடன், அழும் குழந்தைகளுடன், அகதிகளுடன்
  • இயேசுவே துன்புறும் மக்களாக மாறுகிறார்.

இந்த குருத்து ஓலை ஞாயிறு நம்மை அழைக்கிறது: குருத்தோலை மட்டும் ஏந்தாதீர்கள்; சிலுவையையும் ஏந்துங்கள்.

எப்படி? நீதியின் பொருட்டு துன்புறும் ஒவ்வொரு மக்களுக்காக ஜெபிப்பதன் மூலம், அமைதிக்காக வேண்டுவதன் மூலம், போருக்கு எதிராக உள்ளத்தில் மாற்றம் கொண்டதன் மூலம்

ஜெபம்: ஆண்டவரே, போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கண்ணீர் வடிக்கும் மக்களுடன் நீர் இருங்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தாரும். தலைவர்களின் இதயங்களை மாற்றும். ஆயுதங்களை அமைதியாக மாற்றும். இந்த உலகிற்கு உமது சமாதானத்தை அருளும்.

Saturday, March 21, 2026

“வேண்டும்! மரியாதைக்குரிய மரணம்!”

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு  - எசே 37:12-14. உரோ 8:8-11. யோவா 11:1-45

சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம், Harish Rana; euthanasia case என்ற வழக்கில், மாண்புடன் மரணிக்கும் உரிமையை (Right to die with dignity) நடைமுறையில் அனுமதித்தது.

வட இந்தியாவில் கல்லூரியில் படித்து வந்த 'ஹரிஷ் ரானா' என்ற இளைஞர், ஒரு விபத்தால் கோமா நிலையில் சுமார் 13 ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய பெற்றோர் இறுதிவரை அன்போடு பணிவிடை செய்தார்கள். கடைசியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவர்களுக்கு மனவேதனையோடு ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது: ஆம்! இந்தியாவின் முதல் கருணைக்கொலை.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான உண்மையை நினைவூட்டுகிறது. 

  • வாழ்க்கை வணக்கத்திற்குரியது; 
  • ஆனால் மரணமும் மரியாதைக்குரியது.

சமாரிய பெண்ணுக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்த இறைவன் (யோவா 3), பிறவியிலேயே பார்வையற்றவருக்கு பார்வை தந்த இறைவன் (யோவா 9)இன்றைய வாசகங்கள் பெயராக சாவை வெல்லும் வாழ்வை தருகிறார்.  இன்றைய வாசகங்கள் வழியாக அவர் தரும் பாடங்கள் 3.


1. இறப்பு என்னும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் ஞானம்:

நவீனகால மனிதன் மரணத்தை வெல்ல முயற்சிக்கிறான். Elon Musk போன்றவர்கள் புதிய உலகங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். மருத்துவமும், அறிவியலும் போட்டி போட்டுக் கொண்டு மனித வாழ்வை நீட்டிக்க முயற்சிக்கிறது.

ஆனால் ஒரு உண்மை மட்டும் மாறாது: இறப்பு என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தம். இன்று நாம் அழுகை, கண்ணீர், சோகம் இல்லாத உலகத்தை கனவு காணலாம். ஆனால் அவை இல்லாத உலகம் மனித உலகமல்ல.

இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத்தரவில்லை. யாயிரின் மகள், இலாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. 

லாசருக்கு உயிர் தந்த இறைவன், 

சாவை சந்தோஷமாக சந்திக்கிறார். சாவிற்கு சவடால் விடவில்லை, அதை வரவேற்கிறார். சில நேரங்களில் உங்களின் இதயத்திற்கு நெருக்கமானவரின் மரணம் உங்களை புரட்டிப் போடும், ஆனால் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இன்றைய வாசகம் நமக்குத் தரும் முதல் பாடம்: சாவக்கண்டு அஞ்ச வேண்டாம்; எதார்த்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். சாவைச் சந்திக்கத் தயாராகுங்கள்.

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் அவரின் இறப்பு நமக்கு ஒரு பாடமாக திகழ்கிறது. அவருக்கு எதிராக “இளைஞர்களை தவறாக வழிநடத்துதல்” மற்றும் “கடவுள்களை மதிக்காதது” என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஒரு விஷச் செடியைக் குடித்து இறக்க வேண்டும். சாக்ரடீஸ் பயப்படவில்லை, தப்பிக்க வாய்ப்பு இருந்தும் மறுத்தார், அமைதியாக நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது சீடர்கள் நேரத்தை நீட்டிக்க அனுமதி பெற்றனர். என்றாலும் அவர் இறக்க விரும்பினனார். அவர் விஷத்தை குடித்த பிறகு: உடல் மெதுவாக உறைந்து கொண்டது, கால்களில் இருந்து மேலே நோக்கி உணர்வு குறைந்தது, இறுதியில் அமைதியாக உயிர் நீங்கினார். “இறப்பை அனுபவித்து வாழ வேண்டும்” என்பதன் அர்த்தம். மரணம் ஒரு முடிவு அல்ல; அது ஒரு மாற்றம்.

2. மரணத்தின் வலியைப் பகிர அழைப்பு:

  • இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்கள் பாபிலோனுக்கு கடத்தப்பட்ட போது, இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணிக்கிறார். 
  • மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்ல! தங்கள் சொந்த நாட்டை விட்டு, வலியோடு புறப்பட்ட போதும் அடிமைகளோடு அடிமைகளாக அவரோடு பயணிக்கிறார் இறைவாக்கினர்.

 உங்கள் நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்த போதும், அவர்களுடைய மகிழ்ச்சியான பயணத்தில் நீங்கள் இணைந்திருந்தது போன்று, இறப்பை நோக்கிய வலியான பயணத்திலும்  உங்கள் உடனிருப்பை உறுதி செய்ய வேண்டும்.  உங்கள் எதிரிகளாகவே இருந்தாலும், நோயாளிகளாக இருந்தால் எள்ளி நகையாடக் கூடாது.

நற்செய்தியில், "இயேசு கண்ணீர்விட்டு அழுதார்", என வாசிக்கக் காண்கிறோம். கடவுளாய் இருந்தும் ஏன் மானிடனுக்காய் அழுகிறார்? அது நமக்கு ஒரு பாடம்:

மரணத்தின் முன் கண்ணீர் பலவீனம் அல்ல; அது அன்பின் மொழி. சாவு வீட்டில் "நான் இருக்கிறேன்" என்று ஆறுதல் கூறுகிறார்.

“மீண்டும் உள்ளம் குமுறியவராக இயேசு கல்லை அகற்றி விடுங்கள்” என்று கட்டளையிடுகிறார். புதுமைகள் செய்பவர் கல்லை புரட்டிப் போட ஏன் மற்றவரை அழைக்க வேண்டும்? 

ஆண்டவராகிய கடவுள் நாம் எதைச் செய்ய இயலுமோ அதை செய்ய நமக்கு அழைப்பு  கொடுக்கிறார். கல்லை அகற்றுவது நம்மால் இயலக்கூடியது. கட்டுக்களை அவிழ்வது என்பது நம்மால் நிகழக்கூடியது. நமக்கு இயன்றதை நாம் செய்ய வேண்டும்; அதற்கு அப்பாற்பட்டதை கடவுள் செய்வார்.

இன்று நம் சமூகத்தில்:

  • மரணத்தருவாயில் இருப்பவர்களுடன் உடன் இருப்பது, அவர்களுக்காக ஜெபிப்பது
  • அவர்களை தெருக்களிலும், முதியோர் இல்லங்களிலும் கைவிடாமல் கவனிப்பது

இவை எல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த பணி. அந்த ஹரிஷின் பெற்றோர்களைப் போன்று மரணத்தின் விளிம்பு வரை நம்மால் எதை எதை முடியுமோ அவற்றை பணிவிடை செய்து மரணம் தருவாயில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.

 “அருகில் நின்று அழுவது தான் மனிதத்தின் உயர்ந்த மொழி.”


3. உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே

இயேசு மார்த்தாவிடம் கூறுகிறார்: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.” மார்த்தா நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்: “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா!”

இயேசு கல்லறையைத் திறக்கக் கூறியதும், மக்கள் “ஆண்டவரே நான்கு நாள் ஆயிற்று! நாற்றம் அடிக்குமே" என்கிறனர். எபிரேய நம்பிக்கையின் அடிப்படையில், இறந்த ஒருவருடைய ஆன்மா அவரை சுற்றி மூன்று நாட்கள் இருக்கும் என்பது நம்பிக்கை. அந்த மூன்றாவது நாள் கடந்த பிற்பாடு அந்த ஆன்மா அந்த உடலை விட்டு வேறு எங்காவது சென்றுவிடும். ஏனென்றால் உடலுடைய முகம் மாற தொடங்கும். இந்த உடல் மீதும், உறவுகள் மீதும் அதீத பற்று கொண்ட மனித ஆன்மாக்கள் இவ்வுலகில் சுற்றி சுற்றி வருமாம். 

ஆனால் ஆண்டவர் இயேசு மேல நம்பிக்கை வைக்கிற ஆன்மாக்கள் அந்த ஆண்டவரிலே இளைப்பாறுதல் அடையும். 

நம்முடைய வாழ்வு பாவம் காரணமாக, எவ்வளவு நாற்றம் அடிக்க கூடியதாக இருந்தாலும், அவர் நம் அருகில் வருகின்றார் நமக்கு வாழ்வும், உயிரும் தருகின்றார். பாவங்களை மீட்டெடுக்கிறார்! காயங்களை குணமாக்குகிறார் !

ஆம்! எப்பேர்பட்ட நாற்றத்தையும், நறுமணமாக்க வல்லவர் நம் இயேசு. 

என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பின் வாழ்வான் என்றவர்

நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார்.

Saturday, March 14, 2026

பார்வையை சரி செய்வோம் இன்று! - தவக்காலம் நான்காம் ஞாயிறு

தவக்காலம் நான்காம் ஞாயிறு
1 சாமு 16:1, 6-7, 10-13. எபே 5:8-14. யோவா 9:1-41


என்ன பார்க்கிறீர்கள் இன்று? 

இன்றைய இஸ்ரயேலில் எனக்குத் தெரிவதெல்லாம் 

எருசலேமின் வலிமையான கோட்டைகள் அல்ல! 

உயர்ந்த, பழமையான ஆலயங்கள் அல்ல! 

என்னுடைய பார்வைக்குத் தெரிவதெல்லாம் பீரங்கிகள் எழுப்பிய புகைகளும், 

அணுகுண்டுகள்  உருவாக்கிய கருமேகங்களும்தான்!


இஸ்ரேலும் ஈரானும் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டிருக்க 

குளிர் காய்வது அமெரிக்கப் பொருளாதாரம் மட்டும்தான்!

உரக்க பேச வேண்டிய ஐநாவும், 

உண்மையை பேச வேண்டிய உலகமும் 

கைகட்டி கொண்டிருக்கின்றன!

கடவுள் இன்றைய வாசகஙங்கள் வழியாக 

நம்முடைய கண்களை அகல திறந்து பார்க்க அழைக்கிறார்!


இன்றைய நவீன பார்வை:

நான் மற்றவர்களை அவர்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையும், காணத்தகு விதத்தில் அவர் பெற்ற வெற்றிகளை வைத்தும் அவரை பல நேரங்களில் மதிப்பிடுகிறேன். இன்று தோற்றத்திற்கு  (appearance) நிறைய முக்கியத்துவம் தரப்படுகிறது: ‘நான் எப்படி இருக்கிறேன்?’ ‘ப்ரசன்ட்டபிளாக இருக்கிறேனா?’ ‘நவநாகரீகத்தின் அடையாளங்கள் என்னில் இருக்கின்றனவா?’ ‘சந்தையில் மிகவும் அண்மையில் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன் என்னிடம் இருக்கிறதா?’ ‘என்னுடைய வீட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் பார்த்து எத்தனை பேர் வியக்கிறார்கள்?’ ‘நான் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருள்கள் எனக்கு அழகு தருகின்றனவா? அவற்றை நான் மாற்ற வேண்டுமா?’ – இன்றைய உலகம் பார்ப்பதற்கு இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறது. ஆனால், கடவுள் அப்படி அல்ல. கண்ணாடியைப் பார்க்க இந்த உலகம் கற்பிக்கிறது என்றால், உள்ளத்தைப் பார்க்க என்னை அழைக்கின்றார் கடவுள். என் தோலின் நிறத்தையோ, வழுவழுப்பையோ, தலைமுடியின் நிறத்தையோ, ஆளின் உயரத்தையோ அல்ல, மாறாகக என்னுடைய இதயத்தின் உணர்வுகளை, பிரமாணிக்கத்தை, நம்பகத்தன்மையைக் காண அழைக்கிறார்.

முதல் வாசகத்தின் சாமுவேல் ஆண்டவரின் எருசலேமிலிருந்த ஈசாயின் இல்லத்திற்கு கட்டளைப்படி வருகின்றார்.  ஆனால் அவர் பார்வையில் கோளாறு இருந்ததை கடவுள் கண்டு கொள்கிறார். ஈசாயின் முதல் மகன் எலியாபைப் பார்த்தவுடன், அவன் வாட்டசாட்டமாக செம ச்மார்ட்டாக இருக்கக் கண்டு, ‘இவனே அவன்!’ என்று சொல்லி, தைலக் குப்பியை எடுத்துக்கொண்டு ஓடுகின்றார். ஆண்டவர் குறுக்கிட்டு, ‘தம்பி! பொறு! இவனல்ல அவன்! அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் கண்டு மதிப்பிடாதே. ஏனெனில் அவனை நான் ஒதுக்கி விட்டேன். மனிதர் பார்ப்பதுபோல கடவுள் பார்ப்பதில்லை. அவர்கள் புறத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ என்று சொல்லி அமர்த்துகின்றார். சாமுவேல் சவுலுக்காக கொண்டாடிய துக்கத்தை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் கடவுள்.  ஆண்டவருடைய பார்வை மனித புறத்தை ஊடுருவிப் பாய்கிறது. காணக்கூடியவற்றைத் தாண்டி காண முடியாதவை நோக்கிப் பயணிக்கும் அவருடைய பார்வை மனித இதயத்திற்குள் நுழைந்து அங்கே இருப்பதை ஆராய்கிறது. தாவீதைக் கடவுள் தெரிந்துகொள்வதன் பொருள் இதுதான். மேலோட்டமான பார்வையில் அவர் நிறைய தவறுகள் செய்தாலும், தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார்.

ஈசாயின் எட்டாவது மகனாக, வயல் வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது அழைத்துவரப்பட்டபோது, தாவீது ‘சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டிருந்தான்’ என்று சொல்கிறது விவிலியம். பல பெண்களோடு உறவு வைத்து பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் முன்னிலையில் ஒரு குழந்தையாய் தெரிந்தான். கடவுளின் உடன்படிக்கை பேழை பவனியாய வந்தபோது தன்னையே மறந்து கடவுளை போற்றி துதித்தான். அவன் மனம் எளிமையாய் குழந்தையை போல் ஆடி திரிந்தது. தாவீதின் பிரமாணிக்கமான உள்ளம் அவருடைய ஒளிரும் கண்களில் தெரிந்தது.

ஆக, மனிதர் பார்ப்பதுபோல பார்த்த சாமுவேலின் பார்வையற்ற நிலையைக் குணமாக்குகின்ற ஆண்டவராகிய கடவுள், தான் பார்ப்பது போல சாமுவேலை மாற்றுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 9:1-41), பிறவியிலேயே பார்வையற்ற நபர் பார்வை பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம். தன்னிடம் வருகின்ற பார்வையற்ற நபரின் கண்களில் தன்னுடைய உமிழ்நீரால் உருவாக்கிய சேறு பூசி, சிலோவாம் குளத்தில் கழுவுமாறு அவரை அனுப்பிவிடுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் உமிழ்நீரால் குணமாக்குவது வழக்கமாக இருந்தது. ஆக, வழக்கத்திற்கு உரிய செயலையே இயேசு செய்திருந்தாலும், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற அந்த நபர். 

உடல் அளவில் பெறும் பார்வை என்ற நிலையில் நிகழ்வு தொடங்கினாலும், நம்பிக்கையின் வழியாக இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளும் பார்வை என்று நிகழ்வு மாறுகிறது. இறுதியில், பார்வையற்ற நபர் உடலளவிலும் உள்ளத்தளவிலும் பார்வை பெற்றவராக இருக்கின்றார். நற்செய்தி வாசகம் உடல் அளவில் பார்வையற்ற நபர் இயேசுவின் உடனிருப்பால் பார்வை பெற்றதையும், மேலும் அவர் இயேசுவை நம்பியதால் உள்ளத்தளவில் பார்வை பெற்றதையும், பரிசேயர்கள் இயேசுவை நம்பாததால் இறுதிவரை பார்வை பெறாமலேயே இருப்பதையும் நமக்குக் காட்டுகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் என்ன?

நம் பார்வையைச் சரி செய்வோம்.  

இயேசு ‘நம்பிக்கை’ என்னும் இறைகண்ணாடி போட்டுக்கொள்ள அழைக்கிறார்!

  • உங்களுடைய பார்வையில் அமெரிக்க ராணுவம் ஈசாயின் முதல் மகன் எலியாபைப் போல் வலிமை வாய்ந்த தோள்களை கொண்டிருக்கலாம். 
  • இஸ்ரேல் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட இனமாக இருக்கலாம்! அவர்களின் கடவுள், தங்கள் சட்டைப் பைக்குள் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள்!
  • ஈரான் தங்களுடைய கடவுள் பெயரில் போர் தொடுக்கலாம். பீரங்கிகள் வீசலாம். 

ஆனால் கடவுளின் பார்வையில், இந்தப் போரில் குழந்தைகளும், பெண்களும் வலிமை மிக்கவர்கள். 

கடந்த நாட்களில் ஈரானின் ஒரு பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனவாம்.  

கடவுளின் பார்வையில் அவர்கள் அனைவரும் விலையேறப்பெற்ற ஆன்மாக்கள்!


நம் பார்வையைச் சரி செய்வோம்!

அமைதியைப் போதிப்போம்!

Saturday, March 7, 2026

மணமகனும், இறைமகனும் நீரே! சமாரியப்பெண்ணின் தேடல்!

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
விப 17:3-7. உரோ 5:1-2,5-8. யோவா 4:5-42

உணவு இல்லாமல் நீர் குடித்துக்கொண்டு ஒரு மனிதன் பொதுவாக 3 முதல் 8 வாரங்கள் வரை உயிர்வாழ முடியும். ஆனால் நீர் இல்லாமல் ஒரு மனிதனால் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும். காரணம், நம் உடலில் 60% க்கும் மேல் நீர் உள்ளது. நீர் குறைந்தால் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும்.

தவக்காலத்தின் முதல் வாரங்களில் நாம் மூன்று பின்புலங்களைப் பார்க்கிறோம்: பாலைவனம், மலை, கிணறு. இன்றைய நற்செய்தி நம்மை கிணற்றருகே கொண்டு செல்கிறது.

பயணக் களைப்பால் இயேசு கிணற்றருகே அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுக்க வருகிறாள். இயேசு அவளிடம் ஒரு எளிய வேண்டுகோளை முன்வைக்கிறார்: “குடிக்க எனக்கு தண்ணீர் கொடு.”


விவிலியத்தில் கிணறு என்பது வெறும் தண்ணீர் எடுக்கும் இடமல்ல. அது கடவுளும் மனிதனும் சந்திக்கும் இடமாகும். பழைய ஏற்பாட்டில் கிணறு, ஒரு ஆண் ஒரு பெண்ணை சந்திக்கும் டேட்டிங் Dating இடமாக கருதப்பட்டது. பல முக்கியமான Love proposal சந்திப்புகள் கிணற்றருகில்தான் நிகழ்கின்றன. இது கிணற்றை “இறைவனின் திட்டம் வெளிப்படும் இடம்” நிச்சயதார்த்தத்திற்கு முன்னதான ஒரு சந்திப்பு இடமாக காட்டுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடல் தொடங்கும் இடம். ஆண் அவளை அணுகி அவளுக்கு தண்ணீர் கொண்டு வர முடியுமா என்று கேட்கிறான். அந்தப் பெண் ஏற்றுக்கொண்டு தண்ணீர் கொடுத்தால், அவனை ஏற்றுக்கொள்கிறாள், அவள் அவனை தன் தந்தையின் மதிய உணவிற்கு அழைக்க வேண்டும். அழைக்கப்பட்ட இந்த மனிதனுக்கு உணவளிக்கப்படுகிறது. அவளை நிச்சயம் செய்கிறார் என்று பொருள். 

  • ஈசாக்கிற்கான மணமகளாக ரெபெக்காவை கிணற்றருகில் சந்திக்கிறார் (Gen 24: 10-61 ).
  • யாக்கோபு ராகேலை கிணற்றருகில் சந்திக்கிறார் (Gen 29:1-10). 
  • மோயீசன் செபோரவை கிணற்றடியில் சந்திக்கிறார் (Ex 2:15-21)
  • இன்று இயேசு சமாரியப் பெண்ணை கிணற்றருகில் சந்திக்கிறார். 

இந்தச் சந்திப்பில் இயேசு இரண்டு பெரிய மரபுகளை மீறுகிறார். முதலாவது: யூதர்கள் சமாரியர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். இரண்டாவது: யூத ரபிகள் பொதுவிடங்களில் பெண்களுடன் பேச மாட்டார்கள். ஆனால் இயேசு அந்த எல்லைகளையும் தாண்டி பேசுகிறார்.

 அந்தப் பெண் நண்பகலில் தண்ணீர் எடுக்க வருகிறாள். பொதுவாக பெண்கள் காலை அல்லது மாலை நேரங்களில் தண்ணீர் எடுக்க வருவார்கள். நண்பகலில் வருவது, அவள் மற்றவர்களைத் தவிர்க்க விரும்பியதைக் காட்டுகிறது. அவளது வாழ்க்கையில் காயங்கள் இருந்தன. தனிமை இருந்தது.

ஆனால் இயேசு அவளை குற்றம் சாட்டவில்லை. அவளைத் தேடி வந்தார்.

விவிலியத்தில் “ஏழு” என்ற எண் நிறைவை / முழுமையை குறிக்கிறது.

  • இறைவன் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தார்; ஏழாவது நாளில் ஓய்வு கொண்டார்.
  • பரிசுத்த ஆவியின் ஏழு வரங்கள் உள்ளன.
  • திருச்சபையின் ஏழு திருவருட்சாதனங்கள் உள்ளன.

அந்தப் பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு எண்ணிக்கை வருகிறது. அவளுக்கு ஐந்து கணவர்கள் இருந்தனர். இப்போது ஒருவன் இருக்கிறான். மொத்தம் ஆறு. ஏழாவது உண்மையான மணமகன் யார்?

அவர் இயேசு.

‘உனக்கு ஐந்து கணவர்கள் உண்டு’ என இயேசு சொல்வதை ‘உனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம் (பாகால் என்றால் கடவுள் என்றும் பொருள்). பல கடவுள்களை வணங்குவது (விவிலியத்தின்படி) ஆன்மீக விபச்சாரத்தைக் குறிக்கிறது. இஸ்ரேல் யெகோவாவை கைவிட்டு மற்ற கடவுள்களுக்குப் பின்னால் சென்றது ஆன்மிகவிபச்சாரம் என்று அழைக்கப்பட்டது. இப்போது சமாரிய வழிபாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். சமாரியா பாகாலின் வழிபாட்டின் மையமாக இருந்தது. கடந்த கால வரலாற்றில், ஐந்து வெவ்வேறு நாட்டுமக்கள் வெவ்வேறு காலங்களில் சமாரியாவை அடைந்தனர். சமாரியாவில் ஐந்து கோவில்களை கட்டினர். 2 அரசர்கள் 17:30-34 இல் நாம் படிக்கும்படி அசீரியர்கள் சமாரியாவிற்கு கொண்டு வந்த ஐந்து கடவுள்களை உருவகமாக மணந்தனர்.

இயேசு கூறுகிறார்; மொத்தம் ஐந்து கடவுளர்களை வழிபட்டாய்! இப்போதும் ஒரு தெய்வத்தை வணங்கிக் கொண்டிருக்கிறாய். ஆனால் ஏழாவது ஒரு தெய்வம் ஆண்டவரே! இறைமகன். ‘இந்த மலையிலும் அல்ல. அந்த மலையிலும் அல்ல. இயேசு அவளிடம் கூறுகிறார்:

“உண்மையிலும் ஆவியிலும் கடவுளை வணங்குவோர் அவரை வணங்குவார்கள்.”

அந்தச் சந்திப்பு அவளது வாழ்க்கையை மாற்றுகிறது. அவள் தண்ணீர் குடத்தை அப்படியே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறாள். தன்னை மறைத்துக் கொண்டிருந்த மக்களிடமே இப்போது சென்று கூறுகிறாள்: “நான் செய்த அனைத்தையும் சொல்லிய ஒருவரை நான் கண்டேன்.” அவளது சாட்சியத்தைக் கேட்ட மக்கள் இயேசுவிடம் வருகின்றனர். அவர்கள் கூறுகிறார்கள்: “இப்போது உன் சொல்வதற்காக மட்டும் நாங்கள் நம்பவில்லை. நாங்களே கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்.”

நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதன் மூலம் நாம் இயேசுவைப் பற்றி அறியலாம். ஆனால் ஒருநாள் நாம் அவரை தனிப்பட்ட கிணற்றுஅனுபவத்தில் சந்திக்க வேண்டும்.

  • “எனக்கு தாகமாய் இருக்கிறது” என்று இயேசு சிலுவையிலும் சொல்கிறார்.
  • இன்று நாமும் தாகமாய் இருக்கிறோம்—உள்ளத்தின் தாகம்.

சில நேரங்களில் இந்த உலகத்துக் கானல் நீர் தாகத்தைத் தணிக்காது. உண்மையான வாழ்வின் நீர் ஒரே ஒருவர்—இயேசு.

  • தண்ணீர் எடுக்கச் சென்ற அந்தப் பெண் வாழ்வின் ஊற்றைக் கண்டாள்.
  • அவள் காலிக்குடத்துடன் வந்தாள்; நிரம்பிய உள்ளத்துடன் திரும்பினாள்.
  • மணவாளன், ‘இறைவாக்கினர்,’ ‘கிறிஸ்து,’ ‘மீட்பர்’ என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு.

இன்றைய நாளில் நாம் பெண்கள் தினத்தையும் நினைவுகூருகிறோம். அந்த சமாரியப் பெண்ணைப் போல நாமும் வாழ்வின் ஊற்றை கண்டடைய வேண்டுமாக.

HAPPY WOMEN'S DAY!

Popular Posts