உலகப்புகழ் பெற்ற இயக்குனர் டெரன்ஸ் மாலிக் இயக்கத்தில் வெளியான ஒரு உன்னதமான படைப்பு.. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஆஸ்திரிய விவசாயி பிரான்ஸ் ஜேகர்ஸ்டேட்டரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், ஒரு மனிதனின் மனசாட்சிக்கும் அதிகாரமிக்க அரசாங்கத்து அநீதிக்கும் இடையிலான போராட்டத்தை மிக ஆழமாகப் பேசுகிறது.
1939-ஆம் ஆண்டு உலகப் போர் பரவும் போது, ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ள புனித ராதகுண்ட் என்ற அழகிய கிராமத்தில் பிரான்ஸ் ஜேகர்ஸ்டேட்டர், மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்கள் மிகவும் ஏழ்மையான ஆனால் அன்பும் அமைதியும் நிறைந்த ஒரு விவசாய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். போர் தீவிரமடையும் போது பிரான்ஸ் ராணுவப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார். அங்கு பயிற்சியில் இருக்கும்போது நாஜிக்களின் கொள்கைகள் மனசாட்சியைப் பிசைக்கின்றன. அவருக்கு உண்மையில் ஹிட்லருக்கு கீழ் வேலை செய்ய விருப்பமில்லை. ஒரு கத்தோலிக்கராகப் பிறர் மீது வன்முறை செலுத்துவதையும், அடக்குமுறையையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பயிற்சி முடிந்து வீடு திரும்பும் பிரான்ஸ், ஹிட்லரின் கொள்கைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை எடுக்கிறார். இது அவரது குடும்பத்தை கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே எதிர்ப்பை உண்டாக்குகிறது. அவரையும் அவர் குடும்பத்தையும் சிறை பிடிக்குறார்கள். இறுதியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்ணீரின் வழியாக சொல்லி இருக்கிறது படம்.
இது வெறும் போர் சார்ந்த திரைப்படம் மட்டுமல்ல; மாறாக மனிதனின் அறம் மற்றும் உறுதிப்பாட்டைப் பற்றிய ஒரு ஆன்மீகத் தேடல் எனலாம். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரமிக்கத்தக்க இயற்கை அழகை ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் விட்மர் தனது கேமராவில் கவிதையாக வடித்திருக்கிறார். காட்சிகள் பார்வையாளர்களை அந்த அமைதியான கிராமத்து வாழ்க்கையோடு ஒன்றச் செய்கிறது. ஒரு மனிதன் அநீதிக்கு அடிபணிய மறுக்கும்போது, அவன் சார்ந்த சமூகம் அவனை எப்படித் தனிமைப்படுத்துகிறது என்பதையும், அந்தச் சூழலில் அவனது குடும்பம் சந்திக்கும் துயரங்களையும் படம் எதார்த்தமாகப் படம்பிடித்துள்ளது.
வசனங்களை விட மெளனத்திற்கும், பின்னணி இசைக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான பார்வைகளுக்கும் இயக்குனர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் வழி வெளிப்படும் அன்பு, எந்தச் சூழலிலும் பிரியாத ஒரு உன்னதமான பிணைப்பைச் சித்தரிக்கிறது. "உலகம் இன்றும் சீராக இருப்பதற்குப் பின்னால், வரலாற்றில் இடம் பெறாத பல மனிதர்களின் மறைக்கப்பட்ட தியாகங்களே காரணம்" என்ற உயரிய தத்துவத்தை இந்தப் படம் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது. வாழ்வின் தார்மீக விழுமியங்களை நேசிக்கும் எவரும் தவறவிடக் கூடாத ஒரு காவியம் இது.
அவரைச் சந்திக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் கத்தோலிக்க குருக்கள் என அனைவரும், "வெறுமனே வாயால் மட்டும் சத்தியம் செய்துவிட்டு உன் குடும்பத்தோடு போய் வாழ், கடவுள் உன் மனதை அறிவார்" என்று அறிவுறுத்துகிறார்கள்.
ஆனால் பிரான்ஸ், ஒரு பொய் சத்தியம் செய்துவிட்டு விடுதலையாவதை விட, உண்மையாக இருந்து சாவதே மேல் என நினைக்கிறார். சிறையில் இருந்தபடி அவரும் அவரது மனைவி பானியும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் கடிதங்கள் அவர்களின் அன்பையும் மன உறுதியையும் காட்டுகின்றன.
பிரான்ஸ் மற்றும் பானி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு வெறும் கணவன்-மனைவி என்ற நிலையையும் தாண்டி, ஒரு உயர்ந்த லட்சியத்திற்காகப் பிணைக்கப்பட்ட ஆன்மீகப் பிணைப்பாகத் தெரிகிறது.
இறுதியில், அந்த கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் உங்கள் நெஞ்சை வருடும்.
Overall Rating: 7.2 / 10

No comments:
Post a Comment