ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான 'அணுகுண்டின் தந்தை' எனக் கொண்டாடப்பட்ட காரணமயிருந்த ஓபன்ஹெய்மர் பற்றிய உண்மைத் திரைப்படம். இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் உலக அரசியலையே பேசியுள்ள அற்புதமான படம் தான் ஓபன்ஹெய்மர். நோலனின் முந்தைய படங்களான ‘மெமென்டோ’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டெர்ஸ்டெல்லார்’ எல்லாம் உங்களுக்கு பிடித்தால் இது நிச்சயம் உங்களை இம்ப்ரஸ் செய்யும். இந்த நூற்றாண்டின் சிறந்த திரைப்படம் ஓபன்ஹெய்மர் என பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய பால் ஸ்க்ரேடர் (Last temptation of Christ) தனது விமர்சனத்தை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார்.
கதை: 1920-களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தனது மேற்படிப்பை தொடரும் இளம் வயது ஓப்பன்ஹைமர், தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஜீன் டேட்லாக் (ஃப்ளோரன்ஸ் பக்) உடனாக காதல், ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு எதிரான போரில் ஒப்பன்ஹைமரின் பங்கு என அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன.
சொந்த நாடு திரும்பும் அவர், அமெரிக்க அரசின் ‘புராஜெக்ட் மன்ஹாட்டான்’ என்ற ஒரு திட்டத்துக்காக அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் என்ற செவ்விந்தியர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனி நகரமே உருவாக்கப்படுகிறது. அங்குதான் உலகையே புரட்டிப் போடும் அந்த அணுகுண்டு(கண்டு)பிடிப்பை தனது சகாக்களுடன் நிகழ்த்துகிறார். தன் மீதான புகார்களை ஒப்பன்ஹைமர் உதறித் தள்ளினாரா என்பதை ஒரு சிறிய ட்விஸ்ட் உடன் சொல்லியிருக்கிறார் நோலன்.படத்தின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் ஒரு காட்சி. ஹிரோஷிமா - நாகசாகி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன், ஒப்பன்ஹைமரை நேரில் பாராட்ட அழைக்கிறார். வெள்ளை மாளிகைக்குச் செல்லும் ஒப்பன்ஹைமர் அதிபரின் முகத்துக்கு நேரே, ‘மிஸ்டர் ப்ரெசிடென்ட், என் கைகளில் ரத்தக் கறை படிந்திருப்பதைப் போல உணர்கிறேன்’ என்று சொல்கிறார். இதுதான் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் கரு. இது வெறுமனே அணுகுண்டு வெடிப்பை அகலத்திரையில் பிரம்மாண்டமாக காட்டும் ஒரு திரைப்படமல்ல. மாறாக, அறிவியல் முன்னேற்றம், மனித அகங்காரம், நெறிப்பொறுப்பு மற்றும் மனச்சாட்சியின் போராட்டம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஒரு சிந்தனைத் திரைப்படமாகும். அரசியல் சுழலில் அலைகழிக்கப்பட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை. ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஒருவன், தனி மனிதனின் ஈகோவால் ஜீரோவாக கீழிறக்கப்படும் கதை.
ஓப்பன்ஹைமராக வாழ்ந்திருக்கும் சிலியன் மர்ஃபிக்கு இது வாழ்நாளுக்கான படம். இதுவரை வந்த நோலன் படங்களில் எந்தவொரு நடிகரும் (சிலியன் மர்ஃபி உட்பட) வழங்காத ஒரு அற்புதமான நடிப்பை இதில் வழங்கியுள்ளார். சிறந்த நடிகருக்கான பல விருதுகளை தட்டி தூக்கியிருக்கிறார். மேட் டேமன், ஃப்ளோரென்ஸ் பக், எமிலி ப்ளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட்ம் கேஸி அஃப்ளிக், கேரி ஓல்ட்மேன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வரலாறுப் பின்னணி குறித்து சிறிது தெரிந்துகொண்டு படம் பார்க்கச் செல்வது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் ஆழமான அறிவியல் வசனங்களையும், ஏராளமான கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
'இப்போது நான் உலகத்தை அழிக்கும் மரணமாக ஆகிவிட்டேன்’ என்ற கீதையின் மேற்கோள், ஐன்ஸ்டீனுக்கும் ஓப்பன்ஹைமருக்கும் இடையிலான நட்பு, அதனை படத்தில் காட்டிய விதம் சிறப்பு. லுட்விக் கோரன்ஸனின் பின்னணி இசை படத்துக்கும் பெரும் பலம். அணுகுண்டு சோதனையை காட்சியப்படுத்திய விதம் பிரம்மாண்டம்.
இந்த படம் முதலில் என்டர்டெயின்மென்ட்டுக்கான படமில்லை ஆகவே கமர்ஸ்ஷியல் தளபதி விஜய் - தல அஜித் ரசிகர்கள் தவிர்க்கவும். முதல் பாதி முழுக்க வசனங்களாகவும் கருப்பு வெள்ளை, கலர் என காட்சிகள் நகர்கின்றன. எந்த மசாலாவும் இல்லாமல் நல்ல கலைப்படைப்பை விரும்பும் ரசிகர்களுக்கான படமாக இதனை நோலன் கொடுத்துள்ளார்.
அணுகுண்டு எனும் அரக்கன்: பாம் பிளாஸ்ட் காட்சிகள் எல்லாம் படமாக்குவது AI உலகில் ஜுஜுபி மேட்டர். ஆனால், கிறிஸ்டோபர் நோலன் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். அதன் நிஜ வலியையும் நிஜ உணர்வையும் அப்படியே திரையில் படமாக கடத்தப் போகிறேன் என சிஜி காட்சிகளே பயன்படுத்தாமல் இந்த படத்தை இயக்கி உள்ளார். “மனிதன் எவ்வளவு சக்தி பெற்றாலும், அவன் இறைவன் அல்ல” என்ற அடிப்படை உண்மையை நமக்கு சொல்கிறார். “அறிவு பெருகும் போது பொறுப்பும் பெருக வேண்டும்” என்ற இறைவார்த்தையின் ஒளியில், இந்த திரைப்படம் கேட்கும் கேள்வி இதுதான்: மனித உயிரை அழிக்கக்கூடிய சக்தியை உருவாக்கும் உரிமை மனிதனுக்குண்டா? ஓப்பன்ஹைமரின் உள் குற்றவுணர்ச்சி, மனவேதனை, மற்றும் மௌனம், மனச்சாட்சியின் குரல் எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பங்குத் தளங்களில் உள்ள இளையோரை பார்க்கச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.
அன்பும் நீதியும் இல்லாத அறிவியல், மனிதகுலத்தைக் காக்காது—அதை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும்.
Overall Rating: 8.5 / 10
