Frankenstein – இறைவார்த்தையின் வெளிச்சத்தில் ஒரு பார்வை
Frankenstein திரைப்படம் வெறும் திகில் படமல்ல; அது மனிதன், படைப்பு, பொறுப்பு, மற்றும் அன்பு குறித்து கேள்வி எழுப்பும் ஒரு ஆழமான கருவைத் தாங்கிய திகில்படம்.
"இறைவன் தாம் படைத்த அனைத்தையும் நல்லதாகவே கண்டார்” (தொடக்கம் 1:31). இந்த உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் இறைவனிடமிருந்து வந்ததே. மனிதன் சிறு பொருட்களை உருவாக்கினாலுமே, அவன் இறைவனின் இடத்தைப் பிடிக்க முடியாது.
1818ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் 'Frankenstein' இன்று வரை மொத்தம் 423 முழுநீள திரைப்படங்கள், 204 குறும்படங்கள், 78 தொலைக்காட்சி தொடர்களில் இந்த நாவல் எடுத்தாளப் பட்டிருக்கிறது. இம்முறை Guillermo del Toro (The Shape of Water க்காக சிறந்த இயக்குனர் விருது பெற்ற ஹாலிவுட்டின் சிறந்த/பிரம்மாண்ட இயக்குனர் என்றே சொல்வேன்) இந்த கதையை செய்திருக்கிறார்.
கதை: மருத்துவர் victor Frankensteinக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஒன்று உண்டாகிறது. பல்வேறு இறந்தவர்களின் உடலில் இருந்து ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஒன்றாக இணைத்து ஒரே ஆளாக ஓர் உயிரை உண்டாக்கிவிடவேண்டும், அதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறார். அரசாங்கம் இதனை "கடவுளுக்கு எதிரான செயல்" என மறுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் துணையோடு இந்த ஆராய்ச்சியை செய்து ஒரு மனிதனை உண்டாக்கியும் விடுகிறார். அந்த மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை. அவனை யாராலும் அழிக்கவும் முடியாது. அளப்பரிய உடல் பலத்தோடு இருக்கிறான், எல்லா காயங்களும் உடனுக்குடன் தாமாகவே ஆறிவிடுகின்றன. எந்த ஆயுதமும் அவனை சாகடிக்காது. இத்தனை ஆற்றல் இருக்கக் கூடிய ஒருவன் மனிதன் அல்ல மிருகம் என நினைக்கிறார் victor Frankenstein. அதன் விளைவுகளை எப்படி சந்திக்கிறார் என்பதே கதை.
Frankenstein இல் உருவாக்கப்படும் உயிர் ஒரு “அரக்கன்” அல்லஅவன் அன்புக்காக ஏங்கும் ஒரு படைப்பு. "என்னால் தனிமையாக இருக்க முடியவில்லை, நீ என்னை ஏதோ விலங்கு என நினைத்து அழிக்கப் பார்த்தாய். ஆனால் எனக்குள் மனித உணர்வுகள் இருக்கின்றன, என்னை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் எனக்கு என்னைப் போலவே இன்னொரு துணையை உண்டாக்கித் தா" விக்டர் மறுக்கிறார். "ஒன்று நீ அழி. அல்லது என்னை அழித்து விடு. நீ, நான் அடையும் எல்லா துயரங்களையும் அடையவேண்டும். வலியை அனுபவிக்க வேண்டும்" என்று விக்டரை துன்புறுத்தத் தொடங்குகிறான்.
- அரக்கன் உருவானது ஆய்வகத்தில் அல்ல;
- மனித இதயத்தில் அன்பு இல்லாத இடத்தில்தான்.
மனிதன் அன்பு செய்ய மறுக்கப் படும்போதுதான் விடுதலையும் இல்லாமல் சிறையும் இல்லாமல் நரகத்தை அனுபவிக்கிறான். திருவிவிலியம் கேட்கும் கேள்வி இதுதான்: “உன் சகோதரன் எங்கே?” (தொடக்கம் 4:9) இந்தக் கேள்வியே Frankenstein கதையின் மையம்.
நாம் உருவாக்கியதை, பெற்றதை, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை அன்போடு கவனிக்கிறோமா? இல்லையா? ஒவ்வொரு மனிதனையும் காயினாக மாற்றுவதும், இன்னொரு கடவுளின் சாயலாக மாற்றுவதும் நம் பார்வையில் தான் உள்ளது. அன்பில்லாத அறிவு அபாயமாக மாறும். பொறுப்பில்லாத படைப்பு அழிவை உருவாக்கும்.
படத்தில் அவன் மீது எலிசெபத்க்கு வருகின்ற பிரியம்-காதல் புரிந்துகொள்ளக் கூடியதே! - The Shape of Waterன் எலிசா தான் நினைவுக்கு வந்தாள். (இயக்குனரின் அற்புதமான இன்னொரு படம்!) அடித்து சொல்கிறோம் இயக்குனருக்கு விருது காத்திருக்கிறது.
Frankenstein நமக்கு சொல்லும் இறைவார்த்தைச் செய்தி இதுதான்: "அன்பு இல்லாமல் எந்த உயிரும் மனிதராக மாற முடியாது".
Overall Rating: 8.0 / 10



